

திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாளை (நவ.9) அவரது ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடுவார்கள். திருச்சியில் திரும்பும் திசையெல்லாம் ஃபிளெக்ஸ் பேனர்கள் களைகட்டும்.
இந்த ஆண்டு இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. காரணம், ஊழல் வழக்குப் பதிவு செய்யக் கோரி நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை போட்டு வைத்திருக்கும் கிடுக்கிப் பிடி. இதனால் அப்செட்டில் இருக்கும் நேரு, தனது பிறந்த நாளுக்கு படாடோபம் வேண்டாம் என வெளிப்படையாகவே அறிவித்தார்.
இந்நிலையில் டிச.12-ம் தேதி (நாளை) அமைச்சர் நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்பி-யுமான அருண் நேருவின் பிறந்தநாள் வருகிறது.
நேரு பிறந்த நாளில் விட்டதை அருண் நேரு பிறந்த நாளில் பிடிக்கவேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் இருக்கும் திமுக-வினர், திருச்சி முதல் பெரம்பலூர் வரைக்கும் ஃபிளெக்ஸ்களை வைத்து அசத்தியுள்ளனர்.
திருச்சி மாநகரத்திலும் ஃபிளெக்ஸ்களின் அணிவகுப்பு கண்ணைப் பறிக்கின்றன. அதிலும் குறிப்பாக, ‘அருண் நேரு பாசறை’ என்ற பெயரில் அவரது விசுவாசிகள் வைத்திருக்கும் பேனர்களைப் பார்த்துவிட்டு திமுக நிர்வாகிகளே திகிலாகிக் கிடக்கிறார்கள்.
இதற்கிடையே டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அருண் நேரு நேற்று முன்தினம் சந்தித்து பேசியது கொண்டாட்டத்தில் ஹைலைட்.