

மதுரை: திண்டுக்கல் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கை சரியாக விசாரிக்காத விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வேடசந்தூர் சேடபட்டியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கண்ணன் (30). இவர் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகளை திருமணம் செய்தார். சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்தனர். இந்த முன்விரோதம் காரணமாக 2012-ல் கண்ணன், அவரது உறவினர் பெரியசாமி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முத்துக்குமார், செல்வராஜ், செல்வபாண்டி, தூங்கன் என்ற உரத்தேவர் ஆகியோருக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 2023-ல் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்தனர். இதை நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இரட்டைக் கொலை வழக்கை விசாரணை அதிகாரி சரியாக விசாரிக்கவில்லை. கொலையான ஒருவரின் இடது கை துண்டிக்கப்பட்டதாகவும், அந்த கை சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதை விசாரணை அதிகாரி கைப்பற்றவில்லை. அப்படியென்றால் விசாரணை அதிகாரி குற்ற நிகழ்விடத்துக்கு சென்று எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை. காவல் நிலையத்தில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
முக்கிய சாட்சிகள் தவிர்ப்பு: இந்த வழக்கின் விசாரணை சரியாக நடைபெறாதது வேதனையானது. சமீப காலங்களில் நாங்கள் கண்டதில் மிகவும் அலட்சியமான விசாரணை இது. இரு விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக் கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலையான இருவரின் உடலிலும் கடுமையான காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் வழக்கின் முக்கிய சாட்சிகள் வேண்டும் என்றே விசாரணைக்கு தவிர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வாக்குமூலமும் பதிவு செய்யவில்லை. விசாரணை அதிகாரியின் விசித்திரமான நடைமுறைகளால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சரியாக நிரூபிக்க தவறிவிட்டது.
சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் பணி விதிகள் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்கள் 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்குகள் இல்லாமல் இருந்தால் 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.