

சென்னை: கேரளப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இன்று (ஜூன் 4) தொடங்க வாய்ப்பு உள்ளது. மேலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 8-ம் தேதி வரை இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.