

மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு.
விருதுநகர்: மல்லாங்கிணறில் உள்ள பெருமாள் கோயில் கருவறை பகுதியில் இருந்த தமிழ் கல்வெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டறிந்தார்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறில் அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டின் எதிரே சென்னகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 13-ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திருப்பணிகள் நடைபெற்றபோது, பாலாலயம் செய்து பெருமாளை கருவறையில் இருந்து வெளியே வைத்திருந்தனர்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, கோயிலின் உட்புறத்தில் கருவறை அர்த்த மண்டபப் பகுதியை பார்வையிட்டார். அங்கிருந்த சுவர்களில் தமிழ் கல்வெட்டுத் துண்டுகள் இருப்பதை கண்டறிந்தார்.
உடனடியாக பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் சாந்தலிங்கத்தை தொடர்புகொண்டு, அக்கல்வெட்டை படியெடுத்து படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி, ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயகுமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் பெருமாள் கோயிலுக்குச் சென்று, 5 கல்வெட்டுகளைப் படியெடுத்து அமைச்சரிடம் காண்பித்தனர்.
அவற்றில் ஒரு கல்வெட்டு முழுமையான கல்வெட்டாக இருந்தது. அதில், குலசேகரப் பாண்டியனின் 4-வது ஆட்சி ஆண்டில் கற்குறிச்சி ஈஸ்வரன் எனும் சிவன் கோயிலில் அர்த்த மண்டபத்தில் நிலை கால் எடுத்த செய்தி இடம் பெற்றிருந்தது. இக்கல்வெட்டோடு மேலும் 4 துண்டு கல்வெட்டுகளும் படித்தறியப்பட்டன. இவை அனைத்தும் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இதன் மூலம் கி.பி. 13-ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கல்குறிச்சி எனும் ஊரில் ஒரு சிவன் கோயில் இருந்ததும், அது இடிந்துவிட்டதால் அங்கிருந்த கற்களைக் கொண்டுவந்து மல்லாங்கிணறு பெருமாள் கோயில் கட்டப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.
மல்லாங்கிணறுக்குக் கிழக்காக 5 கி.மீ. தூரத்தில் கல்குறிச்சி உள்ளது. ஏற்கெனவே, இந்த ஊரில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் தலைவனின் பாடல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ள செய்திகளின் மூலம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் கோயில், 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்பதும் தெரியவந்துள்ளது.