மணப்பாறை அருகே காவல் துறையை கண்டித்து பொது மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்

மணப்பாறை அருகே காவல் துறையை கண்டித்து பொது மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்
Updated on
1 min read

திருச்சி: மணப்பாறை அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி வெள்ளையக்கோன்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 225-ல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த அதிரடிப்படை போலீஸார் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலரை கலைந்து போகச் சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது.

திமுக நிர்வாகி சண்முகமூர்த்தி என்பவரை தாக்கிதோடு போலீஸார் அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையக்கோன்பட்டி பொதுமக்கள் வாக்களிப்பதை நிறுத்திவிட்டு வளநாடு கைகாட்டி - புத்தாநத்தம் சாலையில் முட்கள் மற்றும் கட்டைகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸார் அழைத்துச்சென்ற சண்முகமூர்த்தியை விடுவிக்க வேண்டும். பொதுமக்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மணப்பாறை டிஎஸ்பி காவியா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகாமாட்சி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் மறியலால் சண்முகமூர்த்தி விடுவிக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் மறியல் மற்றும் வாக்களிப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

பொதுமக்களின் மறியலால் 11.10 மணிமுதல் மதியம் 2.40 வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 1016 வாக்காளர்களில் இதுவரை 316 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மணப்பாறை எம்எல்ஏ அப்துல்சமது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மணப்பாறை அருகே காவல் துறையை கண்டித்து பொது மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்
தேர்தல் ஆணைய நெறிமுறை அறிந்து விஜய் கோரிக்கை வைத்திருக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in