டார்கெட் உதயநிதி... அதிமுக கூட்டணியின் வியூகத்தை முறியடிக்குமா திமுக?

டார்கெட் உதயநிதி... அதிமுக கூட்டணியின் வியூகத்தை முறியடிக்குமா திமுக?
Updated on
1 min read

இத்தனை நாளும் ஸ்டாலினையே பிரதானமாக எதிர்த்து அரசியல் பேசி வந்த அதிமுக - பாஜக கூட்டணி தற்போது தங்களது விமர்சன அம்புகளை உதயநிதியை டார்கெட்டாக வைத்து வீச ஆரம்பித்திருக்கிறது.

இதன் பின்னணி குறித்து பேசும் அரசியல் பார்வையாளர்கள், “பாஜக பிரத்யேகமாக எடுத்த சர்வே முடிவுகளில் மக்களுக்கு திமுக அரசின் மீது சில குறைகள் இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பெரியளவில் அதிருப்திகள் இல்லை எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்தே என்டிஏ கூட்டணியின் பார்வை உதயநிதி பக்கம் திரும்பி இருக்கிறது. அதனால் தான்தற்போது ஸ்டாலினை பெரிதாக தாக்காமல் உதயநிதியை டார்கெட் செய்து வருகின்றனர்.

உதயநிதியை அரியணை ஏற்றுவதற்காகவே ஸ்டாலின் இத்தனை மெனக்கிடுகிறார் என அதிமுக-வும் பாஜக-வும் விடாமல் பிரச்சாரம் செய்கிறது. மோடியும் அமித் ஷாவும் தமிழகம் வரும்போதெல்லாம் உதயநிதியை சாடுவதன் பின்னணியும் இதுவே. ‘வருங்கால முதல்வர் உதயநிதி’ என்று பிரச்சாரம் செய்து ஸ்டாலினுக்கு ஆதரவான மக்களின் மனநிலையை தகர்ப்பதே அதிமுக அணியின் திட்டம். கடந்த தேர்தலில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை உதயநிதி அளித்ததையும் இந்த சமயத்தில் நியாபகப்படுத்துகிறது அதிமுக கூட்டணி.

இதையெல்லாம் உள்வாங்கி இருக்கும் திமுக-வும் இப்போது மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. ஸ்டாலினா இபிஎஸ்ஸா என்ற ரேஸில் மக்கள் மத்தியில் ஸ்டாலினே தற்சமயம் முந்தி நிற்கிறார். அதுவே, இபிஎஸ்ஸா உதயநிதியா என்று பார்த்தால் இபிஎஸ் தான் மக்களின் முதல் விருப்பமாக இருக்கிறார். திமுக தரப்பில் நடத்தப்பட்ட ஆய்விலும் இது தெரியவந்திருக்கிறது. அதனால், தேர்தல் களத்தை இபிஎஸ் - உதயநிதி களமாக மாற்ற தந்திரமாக காய்நகர்த்துகிறது அதிமுக கூட்டணி.

இவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட திமுக, அரசு விழாக்கள் தவிர்த்து கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் மு.க.ஸ்டாலின் முகத்தை மட்டுமே பிரதானப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இளைஞரணி கூட்டங்கள் கூட ஸ்டாலின் தலைமையிலேயே நடப்பதன் உள் ரகசியமும் இதுதான்.

இதன் மூலம் ‘எல்லாமே ஸ்டாலின்’ என்ற பிம்பத்தை திமுக மீண்டும் கட்டமைத்து வருகிறது. ஆக, இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் இலக்கு உதயநிதியாக இருந்தாலும், அதை சமாளிக்கும் கேடயமாக மீண்டும் ஸ்டாலினே மாறியிருக்கிறார்” என்றனர்.

டார்கெட் உதயநிதி... அதிமுக கூட்டணியின் வியூகத்தை முறியடிக்குமா திமுக?
தொகுதிப் பங்கீட்டில் ‘இறங்கி வரும்' கம்யூனிஸ்ட்கள் - 6 தொகுதிகளாவது கிடைக்குமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in