

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 170, பாஜக 23, பாமக 23, தேமுதிக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, தமாகா-வுக்கு 3 இடங்கள் என அதிமுக வியூக வகுப்பாளர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை அதிமுகவிடம் இருந்து 40 தொகுதிகளை பெற்று விட வேண்டும் என பாஜக ஆரம்பம் முதலே திட்டமிட்டு வந்தது.
அதேநேரத்தில், அதிமுகவோ, 20 முதல் 25 தொகுதிகளை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்குவோம் என தெரிவித்து வந்தது. இந்நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று சென்னை வந்தனர். எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக தரப்பில் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், அதிமுக சார்பில், பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தங்கமணி உள்ளிடோரும் பங்கேற்றனர்.
இதில், தமிழக அரசியல் கள நிலவரம், கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட பாஜகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக, அதிமுக வியூக வகுப்பாளர்கள் தரப்பில் சில தகவல்கள் நேற்று பரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை பழனிசாமியிடம், பியூஷ் கோயல் வழங்கினார். அப்போது, தமிழகத்தில் 40 தொகுதிகளில் பாஜக போட்டியிட விரும்புவதாக அவர் பழனிசாமியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக கொடுத்த பட்டியலை பழனிசாமி வாங்கவில்லை. மாறாக, அவர் ஒரு பட்டியலை தயார் செய்து, பியூஷ் கோயலிடம் வழங்கினார். அதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை குறித்த விவரம் இருந்தது.
அந்தவகையில், அதிமுக 170, பாஜக 23, பாமக 23, தேமுதிக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, ஜி.கே.வாசன் தரப்பு 3 என தொகுதிகள் பிரிக்கப்பட்டு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் எப்படி தயார் செய்யப்பட்டது என்பதை விளக்கும் வகையில், கடந்த 4 தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதிகளிலும், அந்தந்த கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் தொடர்பான விவரங்களையும் பாஜகவிடம் பழனிசாமி வழங்கினார்.
பாமக, தேமுதிக, ஜி.கே.வாசன் தரப்புக்கு தேவையான தொகுதிகளை வழங்கி அவர்களை அதிமுக ஒருங்கிணைக்கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை பாஜக ஒருங்கிணைத்துக் கொள்ளட்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அவர்கள் இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு: மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியிட வேண்டாம். ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு மெகா கூட்டணி அறிவிப்பை வெளியிடும் போது பார்த்துக் கொள்வோம். கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையிலும் அண்ணாமலை இடம் பெறக்கூடாது என பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், பாமகவில் தற்போது தந்தை, மகன் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே, ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு தனித்தனியாகவோ, அல்லது இரு தரப்பையும் இணைத்தோ 23 இடங்களை ஒதுக்குவதை அதிமுக பார்த்துக் கொள்ளும் என கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார். பழனிசாமி கொடுத்த பட்டியலை பெற்றுக் கொண்ட பாஜக, அந்த பட்டியல் தொடர்பாக மேலிடத்தில் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்தக்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது தொகுதிகளை இறுதி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளதாகவும், அடுத்த வாரம் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் அதிமுக வியூக வகுப்பாளர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனாலும், ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த பியூஸ் கோயல், பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட யாரும், தொகுதி பங்கீடு தொடர்பான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.