

திருவாரூர்: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் பாதயாத்திரை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு, இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மீண்டும் பேச தொடங்கியிருக்கிறது.
அதனுடைய பொருள் இந்தியாவில் ஒற்றைக் கட்சியின் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கும், இந்தியாவை ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகார பாதைக்கு இட்டுச் செல்வதற்குமான முயற்சியாகும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, இந்தத் திட்டத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்திபொதுமக்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையின்போது, மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகள் முன்வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.