

ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 41-வது பட்டமளிப்பு விழாவில்,எம்பிபிஎஸ் படிப்பில் சிறப்பிடம் பெற்ற ஜானவி ஸ்ரீதருக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தலைவர் மருத்துவர் அபிஜத் சந்திரகாந்த் ஷேத், தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் வழங்கினார். ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவன இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.
சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 41-வது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இளநிலை, முதுநிலை மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி முனைவர் படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த 902 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற 53 பேருக்கு தங்கப் பதக்கங்கள் கொடுக்கப்பட்டன.
ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவனஇணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், துணை இணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, துணைவேந்தர் மருத்துவர் உமா சேகர், பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜி சிங், நிதித்துறை இயக்குநர் ஜெ.ரவிசங்கர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தலைவர் மருத்துவர் அபிஜத் சந்திரகாந்த் ஷேத் பேசியதாவது: மருத்துவத் துறையில் புதிதாகதடம் பதிக்கும் இளம் மருத்துவர்கள் அனைவரும் 3 முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். முதலாவது, கனிவான மருத்துவ சேவை.
நோயாளிகள் உடல்நலக் குறைவுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக மட்டுமே மருத்துவர்களை நாடுவதில்லை. அவர்களுக்கு உள்ள அச்சமும், பதற்றமும், தெளிவின்மையும் மருத்துவரை அணுகினால் சரியாகும் என நம்புகிறார்கள்.
அதனை கருத்தில் கொண்டு அவர்களிடம் கனிவான வார்த்தைகளில் பேச வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை கவனத்துடன் கேட்டறிய வேண்டும். நம்பிக்கையுடன் அவர்களை வழி நடத்த வேண்டும். அதி நவீன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் பலன்களைக் காட்டிலும் இதுதான் வலிமையானது.
இரண்டாவதாக, மருத்துவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்களாக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், மருத்துவ ஆய்வுகள், நோய்களுக்கான தீர்வுகள் என அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
மூன்றாவது நெறி சார்ந்து செயல்படுதல். நோயாளிகள் தங்கள் வாழ்வையே மருத்துவர்களிடம் நம்பி ஒப்படைக்கிறார்கள். அதற்கு பிரதிபலனாக மருத்துவ சேவையாற்றும்போது, நெறி சார்ந்து இயங்குதல் மிகவும்அவசியம் ஆகும். மருத்துவர்கள் நெறிகளை மறவாமல் சமூகத்துக்குப் பங்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.