

சென்னை: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கல்வியின் தரம், பேராசிரியர்களின் திறமை குறித்து அங்கு படிக்கும் மாணவர்கள், ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் குறித்து இணையதளம் மூலம் கருத்தறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இளநிலை மருத்துவ மாணவர்கள் அனைவரும் ஆணையத்தின் இணையதளத்தில் தங்களின் கருத்துகள், தகவல்களைப் பதிவு செய்யலாம். கல்வித் தரம், பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களது பயிற்றுவிக்கும் திறன், செயல்முறை விளக்கங்கள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
அவை அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்யும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.