

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் -அதாலத் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எஸ்.ஏ. தர்மாதிகாரி அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் மூத்த நீதிபதியுமான ஆர்.சுரேஷ்குமார் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த லோக்-அதாலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஏ.ராம மூர்த்தி, ஜி.சொக்கலிங்கம் எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.பி.பாலாஜி, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் தலைமையிலும் நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா அளவில் மொத்தம் 516 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்குகளுக்கு நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன.
இதன்மூலம் மொத்தம் ரூ.1034 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 325-க்கான காசோலைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த லோக்-அதாலத் ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தந்த மாவட்ட நீதிபதிகள் செய்திருந்தனர்.