

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: அதிமுகவுக்கு திமுகதான் எதிரியே தவிர, வேறு யாரும் பலமான எதிரிகள் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கை நிச்சயம் வெற்றியைப் பெற்றுத்தரும். அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியம் என்பது ஏமாற்று வித்தை என்பதையும், திறம்பட ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதையும் அரசு ஊழியர்கள் உணர்வார்கள். அதிமுக தேர்தல் கூட்டணியை பொதுச் செயலாளர் பழனிசாமி பார்த்துக்கொள்வார். அவர் நல்ல முடிவுகளை எடுத்து, வெற்றிக் கூட்டணியை அமைப்பார். கட்சியை விட்டு சென்ற செங்கோட்டையனைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள். அவருக்கு பதில் சொல்லி, பெரிய மனிதராக்க விரும்பவில்லை. அவரை கட்சிக்காரர்கள் மறந்துவிட்டார்கள். மீண்டும் அவரை நினைவுகூர நாங்கள் விரும்பவில்லை.
அதிமுகவில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை. பழனிசாமியை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அதிமுகவுக்கு திமுகதான் எதிரியே தவிர, வேறு யாரும் பலமான எதிரிகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.