

நாராயணசாமி
பழநி: தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். ஆனால், திமுக எங்கள் மீது பழி போடுகிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்த நாராயணசாமி, விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இண்டியா கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்த 5 ஆண்டுகள் வளர்ச்சித் திட்டங்களைக் கொடுத்தது. அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். எனவே, முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி எங்களை முதுகில் குத்திவிட்டது, எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி மீதும் அதன் தலைவர்கள் மீதும் திமுகவினர் பழி சுமத்துகிறார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி திமுவுக்கு பெரும்பான்மை இல்லாத சமயத்தில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. அதனால், 5 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தினார் என்பதை திமுக மறந்துவிட்டது.
மேலும், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டு திமுக தனியாகத் தேர்தலைச் சந்தித்ததையும் அவர்கள் மறந்துவிட முடியாது. கூட்டணியில் மாற்றங்கள் வரும். பல கட்சிகள் இணையும், பல கட்சிகள் பிரிந்து போகும். அதற்காக எங்களை திமுக மற்றும் அதன் தலைவர்கள் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, திமுக, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நாங்கள் புதுச்சேரியில் துரதிருஷ்டவசமாக ஆட்சியை இழந்தோம். மாநில அளவிலான கூட்டணி வேறு, அகில இந்திய அளவிலான கூட்டணி வேறு. இண்டியா கூட்டணி பலமாக இருந்தால்தான் இந்த மதவாத, பிரிவினைவாத மோடி அரசை நாம் வீழ்த்த முடியும். இதை திமுக கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தனியாக நின்று போராடினால் வெற்றி பெறமுடியாது.
விஜய் தற்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளார். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம், அவர் பல காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.