

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நீட்டிப்பு சட்டவிரோதமானது என பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உயர்கல்வி விதிமுறைகள் 2018 (7.3)-ன் படி, துணைவேந்தர் தேர்வுக்கான குழுவில் யுஜிசி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் இடம்பெறுவது கட்டாயமாகும்.
ஆனால், பாரதியார், பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களுக்கான தேடல் குழுக்களில் யுஜிசி உறுப்பினரைச் சேர்க்காமல் தமிழக அரசு குழு அமைத்துள்ளது விதிமீறலாகும்.
யுஜிசி விதிமுறைகளை மீறி நியமிக்கப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தேர்வு முறையை நிறுத்த கோரும் ஆளுநரின் நிலைப்பாடு சரியானது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் பணிகளைத் தொடர்வதுஅதிகார துஷ்பிரயோகம். திமுக அரசு சட்டம் மற்றும் நியாயத்தைப் புறந்தள்ளிவிட்டு, தமிழக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.