

சென்னை: ‘பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரிப் பிரச்சினையை ஒரு முடிவில்லாத வாக்கு வங்கி நாடகமாக மாற்றியதில் காங்கிரஸ்தான் மிகப்பெரிய குற்றவாளி என்பது வரலாறு அறிந்த உண்மை.
காவிரி நீர் தகராறு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் மற்றும் எதார்த்தமான நீரியல் சூழல்களுக்கு உட்பட்ட இரு மாநிலங்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினை.
குறிப்பாக, போதிய மழையின்மை மற்றும் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் இக்கட்டான காலங்களில் இது மிகவும் சவாலானது. இதை உணராமல், பிரதமர் ஏதோ வேண்டுமென்றே வன்மத்துடன் நீரைத் தடுத்து வைத்திருப்பதைப்போல, ‘உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று மாணிக்கம் தாகூர் முழக்கமிடுவது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் மலிவான அரசியல்.
கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தாகூரின் இந்த ஆவேசம் எங்கே போனது? இன்று தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
மேகேதாட்டு விவகாரத்தில் தங்கள் சொந்தக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டையே எதிர்க்க முடியாமல், முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுத் தன்னைத்தானே சிதைத்துக் கொள்கிறது காங்கிரஸ்.
தேர்தல் ஆதாயத்துக்காக காவிரி விவகாரத்தில் வரலாற்றுரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டது காங்கிரஸ்தான். தமிழகத்தின் குறுவை சாகுபடி மிக முக்கியமானது.
எனவே பிரதமரைத் திட்டுவதை விட்டுவிட்டு, நிலையான நீர் மேலாண்மை, நவீன பாசன முறைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
நதிகளை அரசியலாக்கும் உங்கள் கட்சியின் வரலாறு, தமிழக விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.