

“ஈழத்துச் சொந்தங்கள் மீது பரிவும், விளிம்புநிலை மக்கள் மீது அன்பும் கொண்டுதேமுதிக-வை விஜயகாந்த் உருவாக்கினார். அது, அவரது மறைவுக்குப் பிறகு பேரம் பேசும் இடத்தில் நிற்கிறது” என்று தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில், ‘மாற்றத்தை நோக்கி’ என்ற தவெக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது இதில், கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: என் மீது அதிக விமர்சனங்களை வைத்தாலும், அந்த விமர்சனங்களைத் தாண்டி என்னை வாழ்த்துகிற மக்களின் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திமுக, அதிமுக என்று மாறி மாறி வாக்களித்தே பழகிப்போன மக்கள், ஒரு மாற்று அரசியலை விரும்புகிறார்கள். அந்த மாற்று அரசியலை யார் தருவது? அந்த மாற்று அரசியலை தருவதற்காகத்தான் மதிமுக-வை வைகோ தொடங்கினார். அந்தக் கட்சி இப்போது எங்கே இருக்கிறது என்று, அவரே திருச்சியில் இருந்து மதுரை வரைக்கும் தேடத் தொடங்கி இருக்கிறார்.
ஈழத்துச் சொந்தங்கள் மீது பரிவும், விளிம்புநிலை மக்கள் மீது அன்பும் கொண்டு தேமுதிக-வை விஜயகாந்த் உருவாக்கினார். அது, அவரது மறைவுக்குப் பிறகு பேரம் பேசும் இடத்தில் நிற்கிறது. அந்த இடத்தை நிரப்ப நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த சீமான் பைத்தியம் பிடித்து, கட்சியை கைக்கூலி வாங்கும் கட்சியாக மாற்றியுள்ளார். அடுத்து, திமுக, அதிமுக இடையே ஒப்பந்தம் ஒன்றுதான். நீ இருக்கணும்; இல்ல நான் இருக்கணும்.
தமிழகத்தில் நாளை தவெக ஆட்சி அதிகாரத்துக்கு வரும் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. விஜய்யின் அதிர்வுகள் இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தவெக-வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை உள்ளது. சென்னையில் இருந்து நான் வந்த ரயிலில், காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் என்னுடன் வந்தார். நான் அவரிடம், “தவெக-வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சிக்கிறதா?” எனக் கேட்டேன். அதற்கு அவர், “எங்களுக்கு தவெக மீது தான் காதல். ஆனால், கல்யாணம் செய்து கொண்டது திமுக-வை” என வருத்தத்துடன் சொன்னார்.
ஆகவே, எல்லாக் கட்சிகளும் தவெக என்ற நந்தவனத்துக்கு வருவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய ராஜதந்திரி விஜய். மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தமும் இந்த மண்ணில் விழக்கூடாது. தவெக தொண்டர்கள் சக்தியை தேவையில்லாமல் செலவழிக்காதீர்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நில்லுங்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.