

மாணிக்கம் தாகூர்
“அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று காங்கிரஸ் எம்பி-யும் அக்கட்சியின் மக்களவைக் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் கருத்துத் தெரிவித்திருப்பது திமுக-வை கடுகடுக்க வைத்திருக்கிறது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் மாநில ஓபிசி அணி செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் ராஜேஷ்குமார், “2026 தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும். இதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் கருத்து. இதை தலைமையிடம் வலியுறுத்த வேண்டும்” என்று, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மாணிக்கம் தாகூரின் எக்ஸ் தள பதிவு, திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பான பேச்சானது. தற்போதைய அரசியல் சூழலில் 'யாருக்கு வாக்கு?' என்ற தலைப்பில் ஐபிடிஎஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், திமுக-வுக்கு 17.07 சதவீதம், அதிமுக-வுக்கு 15.03 சதவீதம், தவெக-வுக்கு 14.20 சதவீதம், காங்கிரஸுக்கு 3.10 சதவீதம் வாக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மாணிக்கம் தாகூர், "தமிழகத்தில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்தத் தரவு, காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது. அதேசமயம், இப்போது அதிகாரம் மட்டுமல்ல... – அதிகாரப் பகிர்வைப் பற்றியும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘தமிழகத்தில் திமுக கூட்டணி பற்றி முடிவு செய்வது ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் தான். இது இரு சகோதரர்கள் எடுக்கிற முடிவு. காங்கிரஸிலிருந்து பேசினாலும் சரி, திமுக-விலிருந்து யாராவது பேசினாலும் அது தனிப்பட்ட கருத்து தானே தவிர, கட்சியின் கருத்து இல்லை. அது மட்டுமல்ல, மாணிக்கம் தாகூர் பேசுகிறார் என்றால், எம்பி தேர்தல் முடிந்து விட்டது. அதனால் எம்பி-யாக இருக்கிறவர்கள் தான் பேசுகிறார்கள். எந்த காங்கிரஸ் எம்எல்ஏ-வும் அது மாதிரி பேசுவதில்லை.
கூட்டணி முடிவுகளைப் பொறுத்தவரை, 2019-ல் இருந்து இந்த ஃபார்முலாவை பின்பற்றி வருகிறோம். இது வெற்றி பெற்றிருக்கிறது. அதே ஃபார்முலா தான் இந்தத் தேர்தலிலும்’’ என்றார்.