‘அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவர் நல்லகண்ணு’ - என்.சங்கரய்யா | நினைவுக் குறிப்புகள்

‘அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவர் நல்லகண்ணு’ - என்.சங்கரய்யா | நினைவுக் குறிப்புகள்
Updated on
1 min read

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், பல்வேறு மக்கள் இயக்கங்களிலும் அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு பல ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் ஆர்.நல்லகண்ணு என்று சிபிஎம் கட்சியின் மறைந்த தலைவர் சங்கரய்யா தெரிவித்திருந்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணு தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ‘அறவாழ்வின் அடையாளம்' நூலுக்காக ஆர்.நல்லகண்ணு குறித்த தகவல்களை சிபிஎம் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் சங்கரய்யா பகிர்ந்து கொண்டார். ஆர்.நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக மறுபகிர்வாக இங்கே...

“தோழர் ஆர்.நல்லகண்ணு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் பருவம் முதற்கொண்டே நம் நாட்டின் விடுதலை இயக்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரும்பணி ஆற்றியவர்.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு மக்கள் இயக்கங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுப் பல ஆண்டு காலம் சிறையில் இருந்தவர். கடுமையான அடக்குமுறைகளைத் துணிவுடன் சந்தித்தவர்.

நெல்லை மாவட்டத்திலும் தமிழகத்திலும் விவசாயிகளின் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருபவர். தோழர்களிடமும், பொதுமக்களிடமும் மனம்விட்டுப் பேசிப் பழகக் கூடியவர்.

தோழர் மாணிக்கத்திற்குப் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளராகப் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி, இப்பொழுது கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்டவர்.

அவரது எளிய வாழ்க்கைமுறையும் பொதுவாழ்வில் தன்னலமற்ற நடைமுறையும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தில் கூட்டாக நடத்திய பல பேரணிகளிலும், மாநாடுகளிலும் நானும் அவரும் கலந்துகொண்டு இடதுசாரி இயக்க ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்துள்ளோம்” என்று சங்கரய்யா தெரிவித்திருந்தார்.

‘அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவர் நல்லகண்ணு’ - என்.சங்கரய்யா | நினைவுக் குறிப்புகள்
‘நல்லகண்ணு... என்னுடைய நல்ல கண்!’ - மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி | நினைவுக் குறிப்புகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in