நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாள் விழாவில் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி | கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. நினைவலைக் குறிப்பாக ஒரு பகிர்வு இது...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 80-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2005ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், திமுக தலைவர் மு.கருணாநிதி ஆற்றிய வாழ்த்துரை இங்கே...
“தமிழகமே பூரிப்பால் பொங்கி வழிகிற இந்த விழாவில் ஏற்புரை ஆற்றவிருக்கின்ற தியாகத் திருவிளக்கு, பாட்டாளிகளின் கூட்டாளி, உழவர் பெருமக்களின் உறுதுணை, என்னுடைய அன்பு சகோதரர், வயதால் எனக்குத் தம்பி, அனுபவத்தால், தியாகத்தால் எனக்கு அண்ணன் (பலத்த கைதட்டல்), இந்த விழாவின் நாயகர் நல்லகண்ணு அவர்களை வாழ்த்துகிறேன்.
என்னைவிட இரண்டு வயது இளையவர் என்பதால் அவரை நான் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன். அனுபவத்திலும், தியாகத்திலும் நம்மையெல்லாம்விட மூத்தவர் என்பதால் (கைதட்டல்) அவருக்கு நடைபெறுகின்ற இந்த விழா நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாயை நிதியாக வழங்கியிருக்கிறார்கள். அத்துடன் நம்முடைய தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பாக ஒரு வாகனத்தையும் வழங்கி, அதற்கான சாவியைக் கையால் தருகின்ற பணியையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அதை அவர் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் வழங்கிவிட்டு நண்பர் பாண்டியன் அவர்கள், “நல்லகண்ணு அவர்கள் இதையெல்லாம் செய்யமாட்டார், செய்யமாட்டார் என்று சொல்லி (சிரிப்பு) - அவர் அம்பத்தூரிலிருந்து அலுவலகத்துக்கு வருவாரே தவிர, ‘பீச்’சுக்குப் போக மாட்டார், அதைப் போல அவருடைய துணைவியாரும் இந்தக் காரை எடுத்துக் கொண்டு, நகருக்குள் எங்கும் செல்லமாட்டார் என்று அவருடைய பெருமைகளைச் சொல்வதைப் போல அங்கெல்லாம் செல்லக் கூடாது - (பலத்த சிரிப்பு, கைதட்டல்) என்று பாண்டியன் அவர்கள் அவருக்கே உரிய ராஜதந்திரத்தோடு நிபந்தனைகளையெல்லாம் அள்ளி இறைத்து, அன்பளிப்பாகத் தரப்பட்ட வாகனத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார்கள்.
நல்லகண்ணுவின் 80வது ஆண்டு நிறைவு நாள் என்றெல்லாம் அழைப்பிதழில், விளம்பரங்களில் சொல்லப்பட்டிருந்தாலுங்கூட அவருடைய பொதுவாழ்க்கையிலே என்னென்ன குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டதோ, அதைப்போலவே இந்த நாள், தேதியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டிருக்கினறன. எனக்குத் தரப்பட்ட சில குறிப்புகளைப் படித்துப் பார்த்தேன். ‘பாலன் இல்லம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம். அதிலே முழுக்க முழுக்க நல்லகண்ணு அவர்கள் அளித்த ஒரு விரிவான பேட்டி உள்ளது. அந்த விரிவான பேட்டியில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையே அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிலே அவர் சொல்கிறார். ‘நான் பிறந்தது 1925ஆம் ஆண்டு, டிசம்பர் 25ஆம் தேதி’ என்று அதிலே இருக்கிறது. எனக்குத் தரப்பட்ட ஒரு குறிப்பில் டிசம்பர் 26ஆம் தேதி என்றிருக்கிறது. ஆனால் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 18ந் தேதி) நடைபெறுகிறது. இது என்ன புதுமை என்று எனக்குத் தெரியவில்லை. அவரே புதுமையானவர்தானே (கைதட்டல்), ஆகவே அவருடைய விழாவும் புதுமையாக இன்று கொண்டாடப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
அவர் எளிமையானவர், அடக்கமானவர், அமைதியின் உருவம் - இவ்வளவுக்கும் மேலாக ஆர்த்தெழுந்தால் சிங்கம் போல், வேங்கைபோல் (பலத்த கைதட்டல்) அடித்தட்டு மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடியவர், பணியாற்றக் கூடியவர், போராடக் கூடியவர். அந்தப் போராட்டத்தின் காரணமாகத்தான் தம்பி வைகோ இங்கே எடுத்துக்காட்டியதைப் போல், ஏறத்தாழ ஒன்பதாண்டு காலம் அவர் சிறைச்சாலையிலே இருந்திருக்கிறார். அப்போதும் மனம் குலையாமல், நிலை குலையாமல், கொள்கையிலே ஒரு சிறு கீறலும் ஏற்படாமல் உறுதியோடு சிறைவாசத்தை ஏற்றுக்கொண்ட மாமனிதர், பெரும் தியாகி நம்முடைய நல்லகண்ணு அவர்கள். நாமெல்லாம், அவர் வாழ்கின்ற காலத்தில் வாழ்கிறோமே என்றெண்ணி (பலத்த கைதட்டல்) பெருமைப்பட வேண்டும்.
அவருடைய துணைவியார் ரஞ்சிதம் அம்மையார் கலப்புத் திருமணத்தின் மூலமாக வாழ்க்கைத் துணை நலமாக ஆனவர். அவர் தன் கணவரைப் பற்றிக் கூறும்போது, நாம் எப்படி நல்லகண்ணு அவர்களைப் பார்க்கிறோமோ, அப்படித்தான் அவரும் பார்த்திருக்கிறார். நாம் எப்படி நல்லகண்ணுவின் சுபாவத்தை உணர்கிறோமோ, அதைப் போலத்தான் அவரும் உணர்ந்திருக்கிறார்.
ஒரு பேட்டியில் அந்த அம்மையாரைக் கேட்கிறார்கள், ‘உங்களோடு நல்லகண்ணு பேசும்போது, மகிழ்ச்சியாக இருக்கும்போது எப்படி இருப்பார், துக்கமாக இருக்கும்போது எப்படி இருப்பார்?’ என்று கேட்கிறார்கள். ‘மகிழ்ச்சியாக இருக்கும் போது கொஞ்சம் சிரிப்பார். (கைதட்டல்) துக்கமாக இருக்கும்போது எதுவுமே பேசமாட்டார். வாயை மூடிக்கொண்டிருப்பார்’, இது தன்னுடைய கணவரைப் பற்றி அவருடைய வாழ்க்கைத் துணைவியார், போற்றுதற்குரிய ரஞ்சிதம் அம்மையார் அந்தப் பத்திரிகையாளருக்குத் தந்துள்ள பதிலாகும்.
‘நீங்கள் அவரோடு திருமணமான நேரத்தில் சினிமாவிற்குப் போனது உண்டா?’ என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு முறை போயிருக்கிறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இதிலே எனக்கு நல்லகண்ணு அவர்களிடத்திலே கொஞ்சம் கோபம்தான். பெண் உரிமைக்காகப் பாடுபடுவதாக வெளியிலே சொல்லிக் கொண்டு (பலத்த சிரிப்பு) இந்த எண்பதாண்டு கால வாழ்க்கையிலே ஒரேயொரு முறைதான் தன்னுடைய துணைவியாரை சினிமாவிற்கு அழைத்துக் கொண்டு போனாரென்றால், அது பெண்களுக்கான சுதந்திரத்தைத் தர வேண்டிய அளவிற்குத் தரவில்லை என்று நான் கோள் சொல்லவில்லை, குடும்பத்தில் சண்டை மூட்டவில்லை (பலத்த சிரிப்பு) ஏனென்றால் இந்த விழா எல்லோரும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டிய விழா. நம்முடைய குடும்பத்திலே நடைபெறுகின்ற ஒரு விழா. நம் இல்லத்தில் நடைபெறுகின்ற ஒரு இனிய நிகழ்ச்சி. அதிலே நாம் வேடிக்கையாகப் பேசுவது, விளையாட்டாகப் பேசுவது, சிரித்து மகிழ்வது - இவை எல்லாம் இயல்பானவை. அந்த அடிப்படையில்தான் இதைச் சொல்கிறேன்.
அப்படிக் கணவனுக்கேற்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளிலே எந்த அளவிற்கு ஆழ்ந்த பற்றும், ஆழ்ந்த நம்பிக்கையும், ஆழ்ந்த உறுதியும் கொண்டு கணவர் பாடுபட்டாரோ, பாடுபட்டுக் கொண்டிருக்கிறாரோ அதற்கேற்ற வாழ்க்கைத் துணை நலமாக ரஞ்சிதம் அம்மையார் அமைந்திருக்கிறார். அவர்கள் இருவரையும் இந்த நல்ல நாளில் உங்கள் அனைவரோடும் சேர்ந்து நான் வாழ்த்துகிறேன்.
இங்கே அவர் ஈடுபட்ட போராட்டங்களைப் பற்றியெல்லாம் தம்பி வைகோவும், உரையாற்றிய வேறு பல தலைவர்களும், குறிப்பாக தம்பி வாசனும், மருத்துவர் ராமதாசும் குறிப்பிட்டார்கள். திருவைகுண்டத்தில் ஒரு கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டைக்குச் சில சிறப்புகள் உண்டு. பிள்ளைமார் அந்தக் கோட்டையின் அதிபதிகளாக இருப்பவர்கள். அந்தக் கோட்டைக்குள்ளே பெண்கள் வெளியிலிருந்து உள்ளே செல்லலாம், ஆனால், உள்ளேயிருக்கிற பெண்கள் யாரும் வெளியே வரக் கூடாது. அப்படியொரு கட்டுத்திட்டம், சட்டம். அதைப் போல ஆண்களும் யாரும் வெளியேயிருந்து உள்ளே வரக் கூடாது. அவ்வளவு கடுமையான முறையிலே பரிபாலிக்கப்பட்ட கோட்டை. நான் அதை நண்பர்களோடு சேர்ந்து, தம்பி வைகோ போன்றவர்களுடன் சென்று வெளியிலிருந்து பார்த்திருக்கிறேன் - நாங்கள் எல்லாம் ஆண்கள் ஆயிற்றே, அதனால் வெளியிலிருந்து அந்தக் கோட்டையைப் பார்த்திருக்கிறேன்.
அந்தக் கோட்டையின் வெளிப்புறத்திலே உள்ள மதில் சுவருக்கு ஏறத்தாழ 400 அடி நீளம். 10 அடி உயரமுள்ள மதில் சுவருக்குச் சுண்ணாம்பு பூசுகின்ற தொழிலாளர்கள், தலித் மக்கள் அதிக கூலி வேண்டுமென்று கேட்ட காரணத்தால் உள்ளேயிருந்த ஆதிக்கக்காரர்கள், அந்தக் கோட்டையைப் பரிபாலித்தவர்கள், அந்தக் கூலி உயர்வைத் தர மறுத்துவிட்டார்கள். இது ‘கோட்டை’யின் வழக்கம். (பலத்த கைதட்டல்) ஆகவே ஒரு போர் அங்கே மூண்டது. அந்தப் போராட்டத்திற்கு யார் தலைமை வகிப்பார்கள்? நம்முடைய நல்லகண்ணுதான் தலைமை வகித்தார். (கைதட்டல்).
அந்தப் போராட்டத்தை எதிர்த்த ஆள் அம்புகள் ஏராளம், ஏராளம். ஆயுத பாணிகளாக நூற்றுக்கணக்கானவர்கள் ஆதிக்கக்காரர்கள் பக்கம் வந்து நின்றார்கள். போர் தொடங்கியபோது ஆதிக்கக்காரர்களின் படை வரிசை விழிகளை அகலத் திறந்து பார்த்த நேரத்தில் எதிரே நல்லகண்ணுவும், அவரைச் சார்ந்தவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஆச்சரியத்தால் திகைத்துப் போனார்கள். அன்றைக்கு அந்தக் கோட்டை முறியடிக்கப்பட்டது. ஆதிக்கம் அகற்றப்பட்டது. அது முதல் அந்தக் கோட்டைக்குள்ளே இருந்த அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களுக்கெல்லாம் விடுதலையும் தரப்பட்டது. அதற்குக் காரணகர்த்தாக்களாக விளங்கியவர்களில் மிகமுக்கியம் நம்முடைய நல்லகண்ணு என்பதை எண்ணிப் பார்க்கும் போது பெருமையடைகிறேன்.
ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் நான். நல்லகண்ணை என்னுடைய கண்ணுடன் ஒப்பிடுகின்ற பெருமையைப் பெறுகிறேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காரிலே பயணம் செய்து, பரமக்குடி கூட்டத்திலே கலந்து கொண்டேன். பரமக்குடி போன போது இரவு 12 மணி. பரமக்குடி ஆற்றிலே கூட்டம் நடைபெற்றது. நான் மேடைக்குப் போனதும் என்னிடம் சொன்னார்கள், இங்கிருந்து அரை பர்லாங் தூரத்தில் ஆற்றங்கரையின் ஓரத்தில் தோழர் ஜீவா அவர்கள் நண்பர்களோடு அமர்ந்து உங்கள் பேச்சைக் கேட்க வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். ஜீவா அவர்கள் என்னுடைய ஆருயிர் நண்பர். அவர் தலைமறைவாக இருந்தபோது, கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுடைய இல்லத்தில் - அந்த வீட்டு மாடியில் ஜீவா அவர்கள் ஒரு சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தபோது, கலைவாணர் என்னை மாடிக்கு அழைத்துப் போய், ‘இந்தச் சாமியாரைத் தரிசனம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொன்னார்.
ஜீவா அவர்கள் அந்த வேடத்தில் அங்கே ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்து நான் திகைத்துப் போனேன். ஜீவா அவர்கள் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காக இரவு பரமக்குடியிலே ஆற்றுப்பெருவெளியிலே அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், நான் உண்மையைச் சொன்னால் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக அன்று பேசவில்லை, தோழர் ஜீவா அவர்களின் காதில் விழ வேண்டும் என்பதற்காகவே பேசினேன், (கைதட்டல்).
அந்தக் கூட்டம் முடிந்து மறுநாள் காலையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியிலே கலந்துகொள்வதற்காக வரும்போது திருப்பத்தூருக்கு அருகில் என்னுடைய வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டது. அப்போது என்னுடைய கண் அடிபட்டு ஒரு கண்ணிலே ஏற்பட்ட காயம், பல ஆண்டு காலம் என்னைப் பெரும்பாடு படுத்தியது. இறுதியாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்தேன். இப்போதும் நான், ஒரு கண்ணில் சிறிய அளவு புண்ணோடுதான் இருக்கின்றேன். இதனை, இப்போதுதான் முதன் முதலாக இந்த அரங்கத்தில் சொல்கிறேன். எனக்கு ஒரு நல்ல கண் (நல்லகண்) (கைதட்டல்). ஒரு மனிதனின் முகத்திலே இரண்டு கண்கள் இருந்தால்தானே அழகு. ஒரு கண் முகத்திலே இருக்கிற கண், இன்னொன்று அகத்திலே இருக்கின்ற நல்லகண் - எனவே இந்த நல்லகண்ணை வாழ்த்தி விடைபெறுகிறேன்” இவ்வாறு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, நல்லகண்ணு குறித்து புகழ்ந்துரைத்தார்.
நன்றி: முரசொலி | தகவல் உறுதுணை: ‘அறவாழ்வின் அடையாளம்’ புத்தகம் - இந்து தமிழ் திசை வெளியீடு