

கோப்புப் படம்
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என்றும், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தவெக அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். ‘ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு’ என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.
மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்துக்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல.
கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் விஜய்யின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.