“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
Updated on
1 min read

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் நிறைய கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நேற்று அம்பேத்கர் நினைவுநாளையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பாரிமுனையில் இருந்து தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று, ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தை அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தெரிவித்த கருத்து குறித்து கேட்கிறீர்கள். அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்து, ஐரோப்பாவில் இல்லையே.

அதனால், அயோத்தி போல தமிழகம் மாறுவதில் எந்தத் தவறும் இல்லை. நம் அனைவருக்கும் ராமரின் ஆட்சியை பற்றி தெரியும். தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயக கூட்டணி, ராமரின் ஆட்சியை தரும்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும். அதேசமயம் பக்கத்தில் தர்கா இருப்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே, தர்கா அருகில் செல்லாமல், தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி அனுமதி அளித்திருக்கிறார். தர்கா சம்பந்தப்பட்டவர்களோ, இஸ்லாமியர்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேச அவர்கள் விரும்பவில்லை. அதனால், அங்கே மதக் கலவரம் வருவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என கூறியிருக்கிறார். அதற்கான ஆரம்பக்கட்ட வேலையில் தற்போது அவர் ஈடுபடுவது தெரிகிறது. அவருடைய கனவு பலிக்காது.

எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது. திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

அமித் ஷா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வருவார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிறைய கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணியில் நிச்சயம் குழப்பம் இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் 22,000 வாக்காளர்கள் நீக்கம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பகீர் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in