

கரூர்: “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு பதற்றம் வந்துள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் இந்த ஆட்சி வெகு விரைவில் விபரீதங்களை சந்திக்கும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் தனியார் ஹோட்டலில் இன்று (நவ.23) நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: “திருப்பரங்குன்ம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு ஏன் அமல்படுத்த மறுக்கிறது? திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆட்சியர் தலைமையில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டும் சென்று தீபம் ஏற்றவேண்டும் என்றும், கூட்டம் கூடவோ, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், முதல்வர் விஜய் பதற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார். உண்மையில் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு தான் பதற்றம் வந்திருக்கிறது. யாரும் போகத் தேவையில்லை. கூட்டம் போகக் கூடாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நேற்று இன்று புதிதாக உருவானது அல்ல. கடந்த 1923ம் ஆண்டு தொடங்கி 1931-ம் ஆண்டு இந்திய இங்கிலாந்து ப்ரீவியூ கவுன்சில் வரை சென்ற இந்த வழக்கில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வந்த தீர்ப்புகள் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவே அமைந்துள்ளன. மலைப்பகுதி முருகப்பெருமானுக்கு சொந்தமானது என்றும், தர்கா அமைந்துள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது என்றும் நீதிமன்றங்கள் தெளிவுப்படுத்தியுள்ளன.
கடந்த 2025-ம் ஆண்டு நீதிபதி சுவாமிநாதன் மலைப்பகுதியை நேரில் ஆய்வு செய்து தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டிலும் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு இதே கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்திலும் இதே நிலைப்பாட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நீதிமன்றம் கோயிலை இடிக்கவேண்டும் என உத்தரவிட்டால் உடனடியாக அந்த உத்தரவை அமல்படுத்தும் அரசு, உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்றலாம் என தெரிவித்தால் மட்டும் ஏன் அதை ஏற்க மறுக்கிறது? நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்பட வேண்டியது அரசின் கடமை அல்லவா? சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இல்லையா?
முதல்வர் வேல் பிடிக்கிறார். முகாம்பிகை கோயிலுக்கு செல்கிறார். விழாக்களில் பங்கேற்கிறார். இவை உள்நோக்கம் கொண்டதா? வாக்குக்காக செய்கிறாரா? இவை அனைத்தும் உண்மையான பக்தியா அல்லது மக்களை ஏமாற்றுவதற்கான பகல் வேஷமா? உண்மையிலேயே அனைத்து மதங்களையும் மதிக்கும் முதல்வராக இருந்தால், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்? இதன் மூலம் முதல்வர் விஜய் இந்து மக்கள் விரோதி என்பது நிரூபணமாகி உள்ளது.
இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதை தமிழக அரசு நிறைவேற்ற முடியவில்லை என்றால் அரசின் நோக்கம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. இதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுப்பட்டுள்ளன. இந்துக்களின் வாக்குகள் தேவையில்லை என அனைத்து அரசியல் கட்சிகளும் கூறட்டும்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் ஆட்சி வெகுவிரைவில் விபரீதங்களை சந்திக்கும். கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது குறித்த சிபிஐ விசாரணை முடிவு விரைவில் வெளியாகும், நல்லதே நடக்கும்.
உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையத்திற்கே அதிகாரம் என தெரிவித்துள்ளது. ஜன. 4-ம் தேதி வரை கர்நாடகா தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருப்பது யார்?
தமிழக மக்கள் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதையே காவிரி விவகாரம் காட்டுகிறது” என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.