

நயினார் நாகேந்திரன் உறுதி
திருநெல்வேலி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணி வைப்பது என்பது அவர்களின் உரிமை. இதைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன். திமுக எப்படி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதோ அதேபோல அவர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதில் நான் கருத்துச் சொல்ல ஏதுமில்லை.
எவ்வளவு பெரிய பணபலம் இருந்தாலும், இந்தியாவை டாட்டாவோ பிர்லாவோ ஆள முடியாது. திமுகவிடம் 50,000 முதல் 60,000 கோடி ரூபாய் பணம் இருக்கலாம், ஆனால் மக்கள் மனம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
5 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு 300 மடங்கு உயர்த்தியுள்ளனர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு உயர்த்திவிட்டனர். மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.
தமிழகத்திற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால்,எதையுமே தரவில்லை என தமிழக அரசு பொய் கூறுகிறது.ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கு, மாநில அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டித் தங்களது திட்டம் போலக் காட்டி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் உள்ளது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளார். அவர் வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்துப் பேசி இறுதி செய்யப்படும். அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்றார்.
தொகுதி மாறுவது குறித்த விமர்சனங்களுக்கு, வேட்புமனு தாக்கல் செய்த பின்பு இதற்கு பதில் சொல்கிறேன் என்று கூறினார்.
சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. இன்னும் 10 முதல் 15 நாட்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.