“சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை விதைக்கும் திமுக” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை விதைக்கும் திமுக” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

“சிறுபான்மை மக்களிடையே தேவையற்ற அச்சத்தை விதைத்து, அவர்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேட திமுக முயல்கிறது” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் எழுதிய ‘பாரதம் 2014-க்கு முன், பின் இஸ்லாமியர்களின் நிலை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை. எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன.

ஆனால், அந்தப் போதனைகளை அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணமே, திமுக அரசு தான். திமுக அரசு சிறுபான்மையினரைத் தன்வசப்படுத்திக் கொள்ளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகிறது.

சிறுபான்மை மக்களிடையே தேவையற்ற அச்சத்தை விதைத்து, அவர்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேட திமுக முயல்கிறது. அந்தச் சூழ்ச்சியை முறியடிக்கும் விதமாகவே வேலூர் இப்ராஹிம் இந்த அற்புதமான நூலை எழுதியுள்ளார். பொது சிவில் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம், மற்றும் வக்ஃபு சட்டத் திருத்தங்கள் ஆகியவை எந்தவொரு மதத்துக்கும் எதிரானவை அல்ல. இவை அனைத்தும் அடுத்த தலைமுறை இந்தியர்கள் ஒற்றுமையுடனும், சமத்துவத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களின் தேவையையும் அதன் பின்னணியில் உள்ள நன்மைகளையும் இந்த நூல் மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் கட்டமைத்து வருகின்றன. உண்மையில் இஸ்லாமியர்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சி பாஜகதான். உலகிலேயே இஸ்லாமியர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், தங்களுக்கான உரிமைகளுடனும் வாழும் ஒரே நாடு இந்தியாதான். இவ்வாறு அவர் பேசினார்.

“சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை விதைக்கும் திமுக” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க புது உத்திகள்: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in