வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க புது உத்திகள்: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

சென்னையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆய்வு பணிகளுக்கு பின் இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.படம்:எஸ்.சத்தியசீலன்

சென்னையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆய்வு பணிகளுக்கு பின் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.படம்:எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

குடவோலை முறையில் 10-ம் நூற்றாண்டிலேயே தமிழகம் தேர்தலை நடத்தியுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க புது உத்திகள் பின்பற்றப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

இவர் நேற்று, தேர்தல் ஆணையர்கள் சுக்பிர்சிங் சந்து, விவேக் ஜோஷி, முதுநிலை துணை தேர்தல் ஆணையர் மனீஷ் கார்க், துணை தேர்தல் ஆணையர் சஞ்ஜய் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோருடன் இணைந்து, அரசியல் கட்சிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், ஐஜிக்கள், தலைமைச் செயலர், டிஜிபி, ஐடி, ஈடி, கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களாட்சியின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. தேர்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. அதில் 172 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் தமிழகத்தில் 10-ம் நூற்றாண்டில் உத்திரமேரூர் குடவோலை முறை தேர்தல் குறித்து தெரிவித்தேன். அதை அறிந்து உலக நாடுகளே வியந்தன.

தமிழகத்தில் 188 பொது தொகுதிகள், 44 எஸ்சி தொகுதிகள், 2 எஸ்சி தொகுதிகள் என மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

அதன் மூலம் தமிழக வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட பிஎல்ஓக்களை இந்த மேடையில் கவுரவித்தோம். முதன் முறையாக வாக்காளர்களானவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கி கவுரவித்தோம். இந்த எஸ்ஐஆர் பணியில் தகுதியான ஒரு வாக்காளரும் நீக்கப்படவில்லை.

தகுதியில்லாத ஒருவரும் வாக்காளராக சேர்க்கப்படவில்லை. வெறும் 216 ஆட்சேபனை மனுக்கள் மட்டுமே வந்தன. இதுவே எஸ்ஐஆரின் வெற்றியை காட்டுகிறது.

தேர்தல்களின் போது இந்திய சட்டங்கள், பணப் புழக்கத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது. சட்ட விதிகளை மீறினால் பணம் பறிமுதல் செய்யப்படும். வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் அனுமதிக்கப்பட்ட சட்ட வரம்புக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

சட்டப்படி, 100 சதவீதம் வாக்களிப்பு கட்டாயமில்லை என்றாலும், தமிழகம் தொடர்ந்து முன்மாதிரியான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. அதனால் வரும் தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறும்.

இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக விழிப்புணர்வு கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் முழு நிர்வாக இயந்திரமும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.

சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவதில் தமிழகம் இன்னும் உயர்ந்த தரத்தை அடையும், புதிய சாதனைகளை படைக்கும்.

நேற்று, அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடனும் நாங்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தினோம். அவர்களில் பெரும்பாலோர் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பரிந்துரைத்தனர்.

அனைத்து பரிந்துரைகளையும் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், அனைத்து தொடர்புடைய காரணிகளையும் பரிசீலித்த பிறகு, தேர்தல்கள் எத்தனை கட்டங்களாக நடத்தப்படும் என்பதை ஆணையம் முடிவு செய்யும்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க புதிய உத்திகள் பயன்படுத்தப்படும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த காலத்தை விட வேறுபட்டதாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்தாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தீவிரமாக கண்காணிக்கப்படும். பிஹாரை விட சிறப்பாக தமிழக தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் பேச்சு: பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 'தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா' என தமிழில் தெரிவித்தார்.

இந்து தமிழ் திசை சார்பில், "ஒரு ஏழை, சாதிச் சான்று உள்ளிட்ட அரசின் சேவைகளை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது, வேட்புமனு தாக்கலின்போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். அதனால் வேட்புமனு தாக்கல் ஏன் ஆன்லைனில் செய்வதை கட்டாயமாக்கக்கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அளித்த பதில்: வேட்புமனுக்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதி உள்ளது. ஆனால் நேரில் வந்து தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புகின்றனர். சட்ட விதிகளும் அதை அனுமதிக்கிறது. இதனால் சிறு சிரமங்கள் இருந்தாலும், ஜனநாயக திருவிழாவே முன்னுரிமை பெறும் என கருதுகிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

<div class="paragraphs"><p>சென்னையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆய்வு பணிகளுக்கு பின் இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.படம்:எஸ்.சத்தியசீலன்</p></div>
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதிகள் குறைய வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in