

சென்னை: கட்சியின் வாக்கு வங்கிக்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோருவது நாட்டுக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாரதியார் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டின் அதிகாரங்கள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்டால் பல்வேறு பிரச்சினைகள் வரும். நீதிமன்றத்துக்கும், நிர்வாகத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டால் எந்த செயலையும் செய்ய முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின்போது, மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க தடைவிதிக்க கோரி பாமக வழக்கு தொடர்ந்தது.
பின்னர், நினைவிடம்அமைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்கு அப்போதைய முதல்வர் பழனிசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஒன்று பேசுகிறார்கள். அதுவே அவர்களது வாக்கு வங்கிக்கு ஆபத்து வருவதுபோல இருந்தால், வேறொன்று பேசுகிறார்கள். நீதிமன்றத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். நீதிமன்றம் சொல்வதைக் கேட்க வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்டு மக்களவை தலைவரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது தவறான முன்னுதாரணம்.
தனிப்பட்ட ஒரு கட்சியின் வாக்கு வங்கிக்காக இவ்வாறு செயல்படுகின்றனர். இதுவரை எந்த குற்றமும் இல்லாத ஒரு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அவருக்கு எதிராக செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.