

புதுடெல்லி: பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க தமிழகம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசத்துக்கு கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிச.14 வரை படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இப்போது தமிழ்நாடு மற்றும் குஜராத்துக்கு டிசம்பர் 14-ம் தேதிக்கும், அந்தமான் நிக்கோபர், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கருக்கு டிசம்பர் 18-ம் தேதிக்கும், உத்தரப் பிரதேசத்துக்கு டிசம்பர் 26-ம் தேதிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் டிசம்பர் 19 அன்றும், அந்தமான் நிக்கோபர், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் டிசம்பர் 23 அன்றும், உத்தரப் பிரதேசத்தில் டிசம்பர் 31 அன்றும் வெளியிடப்படும்.
இந்த 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வியாழக்கிழமை (டிசம்பர் 11, 2025) முடிவடையவிருந்தது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படவிருந்தன. இந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேற்கு வங்கத்துக்கான கால அட்டவணையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. கேரளாவுக்கான அட்டவணை முன்னரே திருத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிச.18 அன்று முடிவடையும், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.23 அன்று வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று (டிசம்பர் 11) முடிவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 23 அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது