

தமிழக பாஜக சார்பில், எஸ்ஐஆர் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: பிஹார் போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எஸ்ஐஆரைக் கண்டு திமுக-வுக்கு பயம்.
ஏனென்றால், எனது தொகுதிக்குட்பட்ட ஒரு பூத்தில் மட்டும் இறந்து போனவர்கள் 30 பேர், வெளியூர் சென்றவர்கள் 40 பேர், இடம் மாறியவர்கள் 25 பேர் என 95 வாக்காளர்கள் இல்லை. எனவே, எஸ்ஐஆர் பணிகளை சரியாக செய்தால் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
இவை அனைத்தும் திமுகவுக்கான வாக்குகள். திமுக-வின் வாக்குகளை கட் செய்தாலே நமது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பொறுப்புடன் பணி செய்தால் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எஸ்ஐஆர் குறித்து மக்களிடையே அவதூறு கருத்துகள் பரப்பப்படுகிறது. தமிழக அரசு இந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான எதையும் செய்யவில்லை. உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கான பணிகளை மட்டும் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி பலத்தில் செய்து வருகிறார்.
நெல்லில் ஈரப்பதம் பிரச்சினை ஏற்படுவதற்கு திமுக அரசு தான் காரணம். அறுவடைக்குப் பின் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்கு தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசிடம் உள்ள 6 சேமிப்பு கிடங்குகளையும் பயன்படுத்துவதில்லை. எனவே, இதற்கு பொறுப்பேற்க வேண்டியது தமிழக முதல்வர் தானே தவிர மத்திய அரசு இல்லை” என்றார்.