“இளைஞர்களின் கனவுகளை தவிடு பொடியாக்குவது தான் விஜய்யின் மாற்று அரசியலா?” - நயினார் நாகேந்திரன்

காவலர் நியமன தள்ளிவைப்புக்கு கண்டனம்
நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

சென்னை: காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், காவலர் நியமனத்தை தாமதிப்பது, சட்டம் - ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆண்டுக்கான காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

அரசு வேலையை நம்பி உடலளவிலும், மனதளவிலும் இரவு பகலாகத் தங்களை தயார்படுத்தி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை இப்படி தவிடு பொடியாக்குவதுதான், விஜய்யின் மாற்று அரசியலா?

அரசின் இந்த நடவடிக்கையால், வயது வரம்பின் காரணமாக நூற்றுக்கணக்கான படித்த பட்டதாரிகள் காவலர் வேலைக்கான தகுதியிழப்பார்கள் என்பதை அரசு உணரவில்லையா? அல்லது குறிப்பிட்ட விகிதத்தினரை இப்படி தகுதி நீக்கம் செய்வதுதான் அரசின் திட்டமா?

ஆள் பற்றாக்குறையால் ஏற்கெனவே அதிக பணிச்சுமையில் தவிக்கும் காவலர்களுக்கு மேலும் ஒரு வருடத்துக்கு பளுவை கூட்டி, அவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளுவதுதான் ‘அனைவருக்குமான’ அரசா?

எனவே, காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழகக் காவல் நிலையங்களின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

காவலர் நியமனத்தை தாமதிப்பது, சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம். அதுமட்டுமன்றி தமிழக காவல்துறையில் ஆய்வாளர்கள் (Inspectors) பலர், துணைக் காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) பதவிக்கு தகுதி பெற்றும் கூட, நீண்ட காலமாக பதவி உயர்வு பெறாமல் காத்திருக்கின்றனர். அவர்களின் பதவி உயர்விற்கும் விரைவில் வழிவகை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் </p></div>
100+ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேறியதன் எதிரொலி - ‘எக்ஸிட்’ விதிகளை கடுமையாக்கியது அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in