

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி: “தவெக அரசு 6 மாத காலத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஊழல் செய்ய மாட்டோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது படிப்படியாக ஊழல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பெரியார் அறிவுலகம் நூல புத்தகங்கள் மட்டுமல்ல, புதுச்சேரியில் ரூ.3600-க்கு வாங்கிய சைக்கிளை தமிழகத்தில் ரூ.7,600-க்கு வாங்கி இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் ஊழலை ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் செய்ததை எல்லாம் நீதிமன்றம் செய்யக்கூடாது என்று கூறுகிறது என்றால், அரசு மீது நீதிமன்றத்துக்கு நம்பிக்கை இல்லாமல்போய் இருக்கிறது.
பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகம் வாங்குவதில் திமுக மீது குற்றம் சாட்டப்பட்டது ஒருபக்கம் இருந்தாலும், தவெகவினரும் அதே ஊழலை திரும்ப செய்திருக்கிறார்கள். அதற்கு தமிழக முதல்வர் என்ன பதிலை சொல்லப் போகிறார்?
குதிரை பேரத்தை ஆரம்பித்து வைத்தது தவெகதான். அதற்காக இரண்டு இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் ஒரு தொகுதியில் 39 தடவை இறங்கி பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் 5 இடங்களில் மட்டும்தான் பிரசாரம் செய்தார். கடந்த 6 மாத காலத்தில் மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து இருக்கிறது.
திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக நடக்கிறது. போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை. கொலை, கொள்ளை என 350-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதையெல்லாம் தவெக முதல்வர் விஜய் தடுக்க தவறி இருக்கிறார்.
வாக்களித்த மக்கள் எதற்காக வாக்களித்தோம், ஏன் வாக்களித்தோம் என்று சிந்திக்கும் அளவுக்கு இந்த அரசின் நிலைமை இருக்கிறது. மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது மத்திய அரசுதான். இலங்கை மீனவர்களுக்கும் பிரதமர் பாதுகாப்பாக இருக்கிறார். அம்பை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு போட்டியிடுவது குறித்து பார்த்துக் கொள்ளலாம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.