

நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்
நெல்லை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “கோவை பெரியார் நூலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக, குழுவில் இடம்பெற்றவரே தெரிவித்துள்ள நிலையில், இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுகிறது. ‘திரிஷா விஜய்’ என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் இருந்ததாக கூறப்படும் நிலையில், உண்மையிலேயே அந்தப் பெயரில் புத்தகம் உள்ளதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக செயல்பட்ட ஆய்வாளர், தற்போது ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக சிக்கியுள்ளார். திமுக ஆட்சியில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவே அந்த ஆட்சி வீழ்த்தப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தவெக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. கார்த்திகை தீபத்திருநாளில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இந்த அரசு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் நிலவுவதால், 300 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு பிரதமர் மோடி 10 வந்தே பாரத் ரயில்கள், தூத்துக்குடி மற்றும் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லிணக்கம் இருப்பதாக கூறிவிட முடியாது.
தவெக முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினரை விலைக்கு வாங்கி குதிரை பேரத்தை தொடங்கி வைத்தது. இதனால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. தேர்தல் வரும்போது கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தலைமைக்கு தெரிவிப்பார்கள்.
அனைத்து கட்சிகளும் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க முன்வந்தால், நாங்களும் தேசிய தலைமையுடன் பேசி முடிவை அறிவிப்போம். நடிகர் தனுஷின் பின்னால் பாஜக இல்லை. பாஜக ஒரு சுயம்பு கட்சி. இந்தியா முழுவதும் தனித்து செயல்படும் மிகப்பெரிய கட்சி. அதனால், யார் பின்னாலும் நாங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.