

சென்னை: ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது படத்துக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு நீதிபதி உத்தரவிட்டும், தீபம் ஏற்றமுடியாது என அமைச்சர் நிர்மல்குமார் சொன்னால், சட்டப்படி, அவர் சட்டப்பேரவை உறுப்பினர் மட்டும் அல்ல; அமைச்சராக இருப்பதற்குக்கூட தகுதி இல்லாதவர்.
மோடி, அமித் ஷா ஆகியோர், அவர்களது உறவினர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம் என அவர் கூறியிருக்கிறார். இதுபோன்று எங்கேயாவது நடந்திருந்தால் அவர் சொல்ல வேண்டும். தவெகவை போல ‘ஏனோ தானோ’ கட்சியோ, சாதாரண கட்சியோ அல்ல பாஜக.
இன்று மட்டும் அல்ல; இனி வருங்காலங்களில் எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக தான் நாட்டை ஆளும். ஆனால், தவெக அடுத்த தேர்தல் வரை இருக்குமா? இல்லையா? என்பது தெரியாது.
இன்னமும் சினிமாவில் நடிப்பதை போலவே சட்டப்பேரவையில் நடித்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். சட்டப்பேரவையில் அவ்வாறு சைகை காட்ட கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோல முன்பு செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.