

கோவில்பட்டி: வேடநத்தம் மாணவி படுகொலை சம்பவம் நடந்து 9 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அப்படியென்றால் காவல்துறைக்கு திறமை இல்லையா, காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
மேலும், மாணவியின் மூத்த சகோதரியின் படிப்புச் செலவை ஏற்பதாகவும், அவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அப்போது அவர் உறுதி தெரிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவி காணாமல் போனவுடன் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றபோது, அங்கிருந்த காவல் அதிகாரி செல்வராஜ், மாணவி குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். மாணவியின் உடலில் 22 காயங்கள் இருந்துள்ளன.
அதில், 18 காயங்கள்தான் உடலின் வெளியே இருந்துள்ளன. இதுமாதிரி ஒரு மோசமான சம்பவம் சிவகங்கையிலும் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கின்றனர். சம்பவம் நடந்து 9 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
அப்படியென்றால் காவல்துறைக்கு திறமை இல்லையா, காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா, வீட்டில் உள்ள பெண் பிள்ளைகள் எப்படி இனி வெளியே நடமாட முடியும், பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோருக்கு அவர்கள் வெளியே சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்புவார்களா என்ற சந்தேகம் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும் தமிழகத்தில் நடமாடுகின்றன. சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது, ஆட்சி மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் இதுவரை 8,900 கொலைகள் நடந்துள்ளன.
இதில் 1,977 கொலைகள் பெண்களுக்கு எதிரானது. அதிலும் 389 கொலைகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். இவை அனைத்தையும் முதல்வர் மறுக்கிறார்.
அவரது கண்காணிப்பில் காவல்துறை இல்லை. டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை. ஆட்சி மாற்றம்தான் இதற்கு முடிவாக இருக்கும். இவர் அவர் கூறினார். அப்போது பாஜக மாவட்ட தலைவர்கள் சரவண கிருஷ்ணன், சித்ராங்கதன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவியின் தந்தை உறுதி
இதனிடையே கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை சுப்புராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மகள் இறந்ததற்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டால், மகளின் உடலை வாங்க தயாராக உள்ளேன். கொலை செய்யப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உடலை வாங்க வேண்டும் என்ற முடிவில் தான் இருக்கிறேன். பிரேத பரிசோதனை அறிக்கை காவல் நிலையம் வந்துள்ளது. அதனை இனிமேல்தான் வாங்க வேண்டும்.
காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். எனக்கு யார் மீதும் சந்தேகம் கிடையாது. இந்த ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் யார் மீதும் சந்தேகப்பட முடியாது. ஆனால் அரசுத் தரப்பில் நான் எதிர்பார்த்த நடவடிக்கை இல்லை. ஆனால், எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.