

சாத்தூர் தொகுதியில் மக்கள் சந்திப்பு
சாத்தூர்: “பட்டாசு ஆலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். இதற்காக சட்டப்பேரவையில் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். இதுபோன்ற விபத்துகளால் சாத்தூர் தொகுதியை சபிக்கப்பட்ட தொகுதியாகத் தான் நான் நினைக்கிறேன்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
வெம்பக்கோட்டை அருகே வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், இது போன்ற ஒரு பட்டாசு விபத்து நடப்பதை, இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். இந்தப் பகுதி வானம் பார்த்த பூமி. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பட்டாசு தொழில் தான்.
அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால்தான் தொழிலாளர்களை அவசரப்படுத்தி வேலை வாங்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையால் தான் விபத்து நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அரசு அதிகாரிகள் எடுக்கக்கூடிய தீவிர நடவடிக்கையும் இதற்கு ஒரு காரணம். அரசு அதிகாரிகள் பட்டாசு தொழிலாளர்களை துன்புறுத்துவதாகத்தான் நான் நினைக்கிறேன்.
இந்தப் பகுதியில் இத்தொழிலை விட்டால் மக்களுக்கு வேறு தொழில் கிடையாது. இதனால் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இதுபோன்ற தொந்தரவுகளை அதிகம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். நான் வெற்றி பெற்றதும் இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவேன். இதுபோன்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து நடக்கும் போது காயம் அடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது.
அவசரமாக செல்லும் நிலையில் சிவகாசியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. அதனால் வெம்பக்கோட்டை பகுதியிலேயே சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையை கொண்டு வர நான் முயற்சிப்பேன், குரல் கொடுப்பேன். அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலை தொழிலாளர்களை நிம்மதியாக வேலை பார்க்க விட வேண்டும். ஆலை உரிமையாளர்களையோ தொழிலாளர்களையோ விரைவு படுத்தி, அவர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளக்கூடாது. அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். முதல்வரிடம் கூறி கண்டிப்பாக உரிய நிதி உதவியை பெற்றுக் கொடுப்பேன். இதுபோன்ற விபத்துகளால் சாத்தூர் தொகுதியை நான் சபிக்கப்பட்ட தொகுதியாகத் தான் நான் நினைக்கிறேன்.
நான் வந்த போது மிக மோசமாக இருந்ததை உணர்ந்தேன். குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை. சாலை வசதி இல்லை. குக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இந்த நேரத்தில் அரசை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை. வரும் காலத்தில் என்ன தேவையோ அதை செய்து கொடுப்பேன் என்று கூறினார்.