“தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது” - நயினார் நாகேந்திரன்

“தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது” - நயினார் நாகேந்திரன்
Updated on: 
1 min read

சென்னை: ‘தமிழகத்தில் தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் அவர், “முதல்வர் விஜய்யின் ஆட்சியில் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

தேசிய அளவில் ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை ரூ.48.12 ஆக இருக்கும்போது சென்னையில் ரூ.80-க்கும், தேசிய சராசரி ரூ.22.69 மட்டுமே உள்ள உருளைக்கிழங்கு சென்னையில் ரூ.58-க்கும், வெங்காயம் ரூ.68 வரையிலும் விற்கப்பட்டு சாமானிய மக்களின் அடுப்பங்கரையை முடக்கியுள்ளது.

மக்களை வாட்டி வதைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்துப் பேசுவதற்கோ அல்லது அதற்குத் தீர்வு காண்பதற்கோ முதல்வர் விஜய்க்கு எவ்வித பொருளாதாரப் புரிதலும் இல்லை. பணவீக்கம், சந்தைக் கட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி முறை போன்ற அடிப்படை மக்கள்நலக் கொள்கைகளில் குறைந்தபட்ச நிலைப்பாட்டைக் கூட எடுக்க முடியாத அவரது அரசியல் மற்றும் நிர்வாகத் திறனின்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறந்தள்ளிவிட்டு, தனது பிம்பத்தைக் கட்டமைப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார் முதல்வர் விஜய். எனவே, இனியாவது அத்தியாவசியப் பொருட்களைக் கட்டுப்படியாகும் விலையில் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தைத் தயார் செய்வதோடு, வருங்காலத்தைக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தவெக அரசு ஈடுபட வேண்டும்.

மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது” - நயினார் நாகேந்திரன்
“மூங்கில்பாடியில் மூங்கில் வளர்க்க ஆளில்லை” - தவெக எம்எல்ஏ ஆதங்கம்

X