

கோப்புப்படம்
தேர்தலை எப்போது நடத்தினாலும் பாஜக சந்திக்க தயாராக இருக்கிறது என்றும் தமிழகத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் டிச.23-ம் தேதி தமிழகம் வருகிறார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக மையக்குழு கூட்டம் கிண்டியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பார்வையாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 3 மத்திய அமைச்சர்கள் குழுவும் 23-ம் தேதி தமிழகம் வர இருக்கிறது. இது தொடர்பாகவும் அரசியல் நிலவரம், கூட்டணி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் யாத்திரை ஜன.9-ம் தேதி முடிவடைகிறது. நிறைவு விழாவுக்கு, பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவை அழைக்க முடிவெடுத்துள்ளோம். நாளைக்கே தேர்தல் நடத்தினாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும், மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
திமுக-வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கரூரில் 41 பேர் தவெக கூட்டத்தில் நசுங்கி உயிரிழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் வைத்துக் கொண்டு இந்த ஆட்சியை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? பியூஷ் கோயல் தலைமையிலான தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் குழு 23-ம் தேதி தமிழகம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “தேர்தல் பயணத்தை பற்றி நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பேச்சாளர் பயிற்சி முகாம், பொதுக்கூட்டங்கள், பிரிவு சார்ந்த மாநாடுகள் நடத்தி கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட திட்டத்தை பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
திமுக அரசு தனது திட்டங்களில் கருணாநிதி பெயருக்கு பதிலாக, எத்தனை திட்டங்களுக்கு காந்தியின் பெயரை வைத்திருக்கிறது? ராஜீவ்காந்தி பெயரில் மட்டும் 10 விமான நிலையங்கள் இருக்கின்றன. எத்தனை விமான நிலையங் களுக்கு காந்தி பெயரை காங்கிரஸ் வைத்திருக்கிறது? அவர்கள் தான் காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டார்கள். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தற்போது, அதிமுக - பாஜக கூட்டணி பலமாக இருக்கிறோம். இன்னும் ஒவ்வொரு கட்சியாக எங்கள் கூட்டணியில் இணையும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை” என்றார்.