

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா லேப்டாப் வழங்கப்பட்டது. அத்திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் மற்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அம்மா லேப்டாப்பை உறவினர்களிடம் இருந்து பெற்று பயனடைந்த மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். எந்த வகையில் இலவச லேட்டாப் பயனுள்ளதாக இருந்தது, திமுக ஆட்சி வந்த பிறகு, லேப்டாப் கிடைக்காததால், எத்தகைய தடைகள் ஏற்பட்டன என்பது குறித்து மாணவர்களிடம் பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் காணொலி வாயிலாகவும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுடனும் கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மாணவர்கள், பெற்றோர்கள், நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை பிரதிபலித்த அரசாங்கமாக அதிமுக அரசு இருந்தது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல முறை சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், நானும், அதிமுக எம்எல்ஏக்களும் லேப்டாப் வழங்க வலியுறுத்திப் பேசினோம். அப்போதெல்லாம் முதல்வர் அலட்சியமாக இருந்து விட்டு இப்போது கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். நாங்கள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து தான் இப்போது திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை செயல்படுத்தினோம். திமுக ஆட்சியில் அத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், திமுக அரசால் காழ்ப்புணர்ச்சியுடன் நிறுத்தப்பட்ட அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். குறிப்பாக மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க, திமுக அரசை வலியுறுத்தி அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, வி.எஸ்.பாபு, விருகை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.