அமித் ஷா
அதிமுகவுக்கு நயினார்... ஓபிஎஸ் - தினகரனுக்கு அண்ணாமலை! - அழகாய் காய்நகர்த்தும் அமித் ஷா
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான அண்ணாமலை, இவர்கள் இருவரையும் வைத்து என்னவோ திட்டம் தீட்டுகிறார் என்பதால் பழனிசாமி இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கோபத்தில் இருக்கிறார்.
அதேசமயம், அண்ணாமலையை வைத்து, தினகரனும் ஓபிஎஸ்ஸும் வேறெந்த திசையிலும் ஊடுபாய்ந்து விடாமல் இருக்க அணைபோட்டு வருகிறார் அமித் ஷா. அவரைப் பொறுத்தவரை பழனிசாமியை சாந்தப்படுத்த நயினார் நாகேந்திரனையும் ஓபிஎஸ், தினகரனுக்கு அணைகட்ட அண்ணாமலையையும் அழகாகப் பயன்படுத்தி வருகிறார்.
தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அன்றாடச் செய்திகளில் அடிபடுவதை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அண்ணாமலை. தேர்தல் நெருங்குவதால் இப்போது மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்திப்பது, கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ஆளும் கட்சிக்கு எதிராக அனல் கக்கும் வசனங்களைப் பேசுவது என தமிழக பாஜக இப்போது மீண்டும் அண்ணாமலையை மையமாக வைத்து சுழல ஆரம்பித்திருக்கிறது.
2026 தேர்தலில் தமிழகத்தைவிட்டு திமுக துடைத்து எறியப்படும் என்று ஆவேசப்பட்டிருக்கும் அமித் ஷா, அதற்கான வியூகங்களை வகுக்கவே அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கவும், அதிமுக-வுக்கு வெளியில் இருக்கும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை கூட்டணிக்குள் கொண்டு வரவும் அண்ணாமலைக்கு அமித் ஷா சில அசைன்மென்ட்களை கொடுத்திருப்பதாக பாஜக-வினரே சொல்கிறார்கள். இதன் ஒருபகுதியாகவே, ஓபிஎஸ், டிடிவி, தினகரனை சந்தித்துப் பேசி வருகிறார் அண்ணாமலை.
இந்த வேலைகளை நயினார் வசம் ஒப்படைத்தால் கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம் வரும் என்பதால் இதை அண்ணாமலையிடம் ஒப்படைத்திருக்கிறார் அமித் ஷா.
ஜெயலலிதா காலத்தில் அதிமுக-வில் அவர் தான் எல்லாமே மற்றவர்கள் எல்லாம் அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்து முடிக்கும் களப்பணியாளர்களாக மட்டுமே இருந்தார்கள்.
அந்தக் கட்சியில் அப்படியே இருந்து பழகிவிட்ட நயினார் நாகேந்திரன் இன்னும் முழுமையான பாஜக-காரராக மாறவில்லை. ஆனால், அண்ணாமலை அதற்கு நேர்மாறாக இருக்கிறார். அதனால் தான் அவரை ஆயுதமாக எடுத்துச் சுழற்றுகிறார் அமித் ஷா.
