

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் ஆண்டு வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். இறுதியில் பழனிசாமி பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் எத்தனையோ இடையூறுகளைத் தாண்டித்தான் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். அதனால் தான் அதிமுக ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாமல், பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பதாக குறை கூறி வருகின்றனர்.
அதிமுகவின் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சி மலரும், இதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.
மகளிர் உரிமைத் தொகையை அறிவித்த ஸ்டாலின், தனது ஆட்சியில் 28 மாதங்கள் கொடுக்கவில்லை. அதிமுகவின் அழுத்தத்தால், வேறு வழியின்றி கொடுக்க தொடங்கினார். விடுபட்ட 30 லட்சம் மகளிருக்கு இப்போது கொடுக்க உள்ளனர். இது அந்த மகளிர் கஷ்டத்தை பார்த்து கொடுப்பதில்லை. அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து கொடுக்கப்படுகிறது.
திமுக அரசு எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஓட்டு மட்டும் அதிமுகவுக்குத்தான் போடுவார்கள். ஸ்டாலின் மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார்.
திமுக ஆட்சியில் வரி மேல் வரி போட்டு மக்கள் ரத்தம் உறிஞ்சுகின்ற நிலை. நெசவுத் தொழில் நலிவடைந்துவிட்டது. தொழிலாளர்கள் வறுமையில் வாடி, உடல் உறுப்புகளை விற்று வாழ்க்கை நடத்தும் துர்ப்பாக்கிய நிலை திமுக ஆட்சியில் தான் நடக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பதுதான் தினமும் செய்தியாக இருக்கிறது.
போதை பொருள் விற்பவர்களில் பாதி பேர் திமுகவினர் தான். எல்லா துறைகளிலும் ஊழல், டாஸ்மாக் துறை, ஒப்பந்தம் மற்றும் விற்பனை முறைகேடு, மணல் கொள்ளை, போக்குவரத்து, மின்சார வாரியத்தில் ஊழல். மதுரையில் மாநகராட்சியில் 200 கோடி ஊழல் செய்தனர்.
இப்போது நகராட்சித் துறை ஊழலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில் முதலாவதாக ஒருவர் போகப் போகிறார். திமுகவினர் படிப்படியாக ‘உள்ளே’ (சிறைக்கு) போவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது. அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்.
ஒரு அமைச்சர் பேசிய ஆடியோவில் ரூ.30 ஆயிரம் கோடியை உதயநிதி, சபரீசன் சேர்த்து வைத்ததாக உள்ளது. அதிமுக ஆட்சியில் அதை தோண்டியெடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், அண்ணாநகர் சிறுமி வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குகள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசாரிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவார்கள்.
திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவருக்கு மட்டும்தான் ஆட்சியில் பங்கு கிடைக்கும். அதிமுகவில் விசுவாசமாக உழைத்தால் உச்சபட்ச பதவிக்கு வரமுடியும்.
2026 தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் கவலைப்படாதீர்கள், வழக்கமாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல் இப்போதும் அமைக்கப்படும், பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி முடிவெடுக்க பழனிசாமிக்கு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ‘தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக-வுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு, கடந்த மே மாதம் 2-ம் தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.
வரும் தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, அதிமுக தலைமை தாங்குகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது. நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கை பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது ஸ்டாலின் திமுக அரசு.
வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப்பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது. முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களை கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதல்வராக்குவோம் என சூளுரை ஏற்போம்.’’ என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.