

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.518 கோடிக்கு மது விற்பனை செய்ததுதான் திமுக அரசின் சாதனை என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன்: ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனை. பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 கொடுத்து அந்த பணத்தை டாஸ்மாக் மூலமாக வசூலித்துள்ளது. போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதைவிட டாஸ்மாக் வருமானத்தை பெரிதாக பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது.
அன்புமணி: மக்கள் நலனுக்காக துரும்பைக்கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும் மேலும் குடிகாரர்களாக்கி மது வணிகத்தை பெருக்குவதில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
இது சாதனை அல்ல. வேதனை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிலையிலும் மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை. மக்கள் விரோத அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.