

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் முதல் கட்டமாக 5 வாக்குறுதிகளை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று அறிவித்தார். உடன், மூத்த நிர்வாகிகள்.
சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும். பெண்களைப் போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை முதல்கட்டமாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 109-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். அதன் விவரம்:
மகளிர் நலன்: சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்க, ‘குலவிளக்கு’ திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.
ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் இலவச பேருந்துபயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
‘அம்மா இல்லம்’ திட்டம்: ‘அம்மா இல்லம்’ திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருக்க சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கிஅடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும். பட்டியலின மக்கள் ஒரே குடும்பத்தில் வசிக்கும் நிலையில், அவர்களது மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும்போது, அரசே இடம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
150 நாள் வேலை: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம்: 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் ‘அம்மா இருசக்கர வாகனங்கள்’ வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாங்கள் ஆட்சி செய்யும்போது ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடிதான் கடன் இருந்தது. அரசுக்கு வரி வருவாய் இல்லாத நேரத்தில்கூட கரோனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் திறமையாக கையாண்டு நிதிச்சுமையை வெகுவாக குறைத்தோம்.
திமுக அரசு பொறுப்பேற்றதும், நிதி மேலாண்மை செய்ய நிபுணர்குழு அமைத்து கடன் குறைக்கப்படும் என்றனர். வருவாய் உயர்த்தப்படும் என்று கூறினர்.
ஆனால், அதற்கு நேர்மாறாக திமுக ஆட்சியில் கடன்தான் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி முடியும் நிலையில் சுமார் ரூ.5.50 லட்சம் கோடி கடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே,மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்தும் திறன்எங்களுக்கு உள்ளது. திமுக அரசுக்கு இல்லை. நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். நிர்வாகத் திறமைஅற்ற அரசு இருக்கும்போது தான் நிதிச்சுமை அதிகரிக்கிறது.
மேலும் பல அறிவிப்புகள்: 2-ம் கட்டத் தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடும்போது இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் ஒவ்வொரு மண்டலமாக போய்க்கொண்டு இருக்கின்றனர். மக்களிடம் மனு வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் கோவை மண்டலத்துக்குச் செல்லவில்லை. அங்கு சென்று கருத்துகளை விண்ணப்பமாகப் பெற்று, அதையெல்லாம் சேகரித்து, அறிக்கையாக தயாரித்து, ஆய்வு செய்யப்படும்.
அதன் அடிப்படையில், மக்கள் என்னென்ன நினைக்கிறார்களோ, அவையெல்லாம் எங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன், பா.வளர்மதி, வைகைச்செல்வன், தம்பித்துரை எம்.பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுகவும், இதுவரை சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளதே தவிர, ஒருபோதும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது இல்லை. இந்த சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கடந்த ஜூலை மாதமே தமிழகம் முழுவதும் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதுவரை 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். மேலும், எந்த கட்சியிலும் இல்லாத வகையில், பூத் கிளை நிர்வாகிகள் தலா 9 பேரையும் நியமித்து, அவர்களை தகவல் தொழில்நுட்ப அணியுடன் இணைத்து, அதிமுக அரசின் சாதனைகள், திமுக அரசின் குறைபாடுகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். வழக்கமாக, தேர்தல் அறிவித்த பிறகுதான் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும். அப்படி இல்லாமல், ஏற்கெனவே திட்டமிட்டபடி, தேர்தல் அறிக்கைதயாரிப்புக் குழு பரிந்துரையின் அடிப்படையில், 5 முக்கிய வாக்குறுதிகளை பழனிசாமி முன்கூட்டியே வெளியிட்டுள்ளார்.
மக்களின் கருத்துகள் அடிப்படையில், 2-ம் கட்ட தேர்தல் அறிக்கையில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறி, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக, தவெக ஆகிய கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்துள்ள நிலையில், பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அக்கட்சிகளும் அடுத்தடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.