நாகை மாலி

நாகை மாலி

“பாஜகவை எதிர்த்து பேசாமல் அரசியல் செய்ய முடியாது” - மார்க்சிஸ்ட் சட்டப் பேரவைக் குழு தலைவர் நாகை மாலி நேர்காணல்

Published on

மற்ற கட்சிகள் எல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், “நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கமாட்டோம்” என தெளிவுபடுத்தி இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இந்த நிலையில், தமிழக இளைஞர்களின் அரசியல் ஈர்ப்பு, திமுக-வுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் நாகை மாலியிடம் 'இந்து தமிழ் திசை'க்காகப் பேசினோம்.

Q

சீமானும் விஜய்யும் இளைஞர்களை ஈர்த்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை சிந்தாந்தங்கள் இளைஞர்களைச் சென்றடைகிறதா?

A

மார்க்சிஸ்ட் கட்சி ஒரு கொள்கை சார்ந்த இயக்கம். இது தனிநபர்களை மையப்படுத்திய இயக்கம் அல்ல. தலைவர்கள் மாறினாலும் தத்துவம் நிலையானது. விஜய்யும் சீமானும் இளைஞர்களை ஈர்ப்பது ஒருவித கவர்ச்சியான அரசியல் பேச்சின் மூலமாகத்தான். அது நிலையானதா என்று சொல்ல முடியாது. ஆனால், எங்கள் கட்சி தத்துவார்த்த அடிப்படையில் இளைஞர்களைத் திரட்டுகிறது. அது மெதுவாக நடந்தாலும் உறுதியாக இருக்கும்.

Q

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என கேரளம் தெரிவித்துள்ளது. தமிழக அரசையும் அப்படி முடிவெடுக்க வலியுறுத்துவீர்களா?

A

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை மீண்டும் அவர்களிடம் இருந்து பறிக்கிறது. இதை எதிர்த்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. அதேபோல தமிழக அரசும் இந்தச் சட்டங்களை ஏற்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.

Q

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது நாகை மாவட்டம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறதே..?

A

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் வடிகால் பகுதியாக உள்ளது. மழைக் காலங்களில் மற்ற மாவட்டங்களின் நீரும் இங்கேதான் வந்து சேர்கிறது. தற்போதுள்ள வடிகால் வசதிகள் போதுமானதாக இல்லை. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அதற்காக பிரத்யேகமான ஒரு திட்டத்தை உருவாக்கி, மழைநீரை முறையாக வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Q

விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கையில், மார்க்சிஸ்ட் கட்சி அதை மறுதலிப்பது ஏன்?

A

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. அது எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்கப் பயன்படாது. எங்களுடைய திறமையை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆட்சி அதிகாரம் எங்களது கைக்கு வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

Q

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என நம்புகிறீர்களா?

A

இன்றைக்கு கட்சிக்கு இருக்கும் செல்வாக்கையொட்டி கடந்த முறை போட்டியிட்ட இடங்களை விட இம்முறை கூடுதலான இடங்கள் வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்துவோம். அந்தவகையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நிச்சயமாக இரட்டை இலக்கத்தில் இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Q

விஜய்யின் அரசியல் வருகையால் பாதகம் திமுக கூட்டணிக்கா... அதிமுக கூட்டணிக்கா?

A

விஜய்யின் வருகையால் எந்தக் கட்சியின் வாக்குகள் பிரியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், திமுக கூட்டணியின் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

Q

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்கிறதே பாஜக..?

A

ஒரு மாநில தேர்தலின் அனுபவம், மற்ற மாநிலத்திலும் பிரதிபலிக்கும் என்பது அரசியல் புரியாமை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தன்மை, பாரம்பரியம் உண்டு. இதையெல்லாம் அவ்வளவு எளிதாக உடைத்துவிட முடியாது. பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் துணைகொண்டு பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் வென்றுவிடலாம் என்று நினைப்பது அரசியல் போதாமை.

Q

செங்கோட்டையனைத் தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி.தினகரன் போன்றவர்களும் விஜய் பக்கம் போனால் தவெக-வின் பலம் கூடிவிடுமோ?

A

தமிழகத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள்? அவரை தவிர அவருக்கு யாரும் இல்லை. இதனாலேயே எங்கு செல்வது என்று தெரியாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறார். செங்கோட்டையனும் இருக்கக்கூடிய இடத்தில் இருந்தால் தான் அவருக்கு மதிப்பு. அந்த மதிப்பு இப்போது அவருக்கு இல்லை. ஆகவே, இவர்களெல்லாம் தவெக-வில் சேர்ந்தாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள்.

Q

பாஜக-வை கொள்கை எதிரி என்று சொல்லும் விஜய் உங்களைக் கூட்டணிக்கு அழைத்தால் என்ன செய்வீர்கள்?

A

தமிழகத்தில் பாஜக-வை எதிர்த்துப் பேச வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருக்கிறது. இங்கு பாஜக-வை எதிர்த்துப் பேசவில்லை என்றால் அரசியல் செய்ய முடியாது. அதற்காகவே பெரியார் பற்றியும், அம்பேத்கர் பற்றியும் விஜய் பேசுகிறார். அதுதான் தமிழக மண். ஆனால், விஜய்யின் அரசியல் வேறு. எங்களுடைய அரசியல் வேறு.

Q

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளும் திமுக, பாதகமாக வந்தால் அதை ஏற்க மறுப்பதாக விமர்சனங்கள் வருகிறதே..?

A

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி, பாஜக-வுக்கு எதிராக நிற்பவர்கள் யார்... இந்துக்கள் தான். இறைவழிபாடு என்பது பாரம்பரியமாக நடைபெறக்கூடியது. பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் இருக்கின்றன.

அதை பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் அரசியல், மதத்தை கலந்து அதன்மூலம் கட்சியை வளர்த்தெடுக்க நினைக்கின்றனர். ஆன்மிகத்தை மதவெறியாக மாற்ற முயற்சிக்கின்றனர். இது தமிழக மக்களிடம் நிச்சயம் எடுபடாது.

<div class="paragraphs"><p>நாகை மாலி </p></div>
“செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!” - ததக தலைவர் பழ.கருப்பையா பளிச் நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in