“நான் யாரையும் தவறாக பேசவில்லை; எனது பேச்சை திரித்துவிட்டனர்” - உதயநிதி

“நான் யாரையும் தவறாக பேசவில்லை; எனது பேச்சை திரித்துவிட்டனர்” - உதயநிதி
Updated on
2 min read

திருச்சி: தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை. எனது பேச்சை திரித்துவிட்டனர் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு காவல் துறை வாகனத்தில் அவரை அழைத்து சென்ற போலீஸார், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்தார்.

“நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக பேசினேன்.

காவிரியில் தண்ணீர் கேட்டு பெற இந்த அரசுக்கு வக்கு இல்லை. இந்த அரசு திசை திருப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எங்களது போராட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எழுச்சியும் ஏற்பட்டது. அதை திசை திருப்பும் வகையில் இன்று காலை நான் பேசாத ஒரு விஷயத்தை திரித்து, தேசிய மீடியாவில் ஒளிபரப்பி, காவல் துறை மூலம் என்னை கைது செய்தனர்.

அப்போது கூட செய்தியாளர்களிடம் இந்த நடவடிக்கையை நகைச்சுவையாக பார்க்கிறேன். இதற்கு நான் பயப்பட மாட்டேன் என்று சொன்னேன். அதே நேரத்தில் நீதிமன்றத்தில் என்னை விசாரணைக்கு அழைத்து செல்வதாக அரசு தரப்பு தெரிவித்தது.

அரசு செலவில், மக்கள் வரி பணத்தில், 3,000 போலீஸாரை பயன்படுத்தி காவல் துறை வாகனம் மூலம் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சுமார் 400 கிலோ மீட்டர் சாலை வழியாக ஏதோ தீவிரவாதியை அழைத்து செல்வது போல அழைத்து சென்றனர். தஞ்சாவூருக்கு செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் என்னிடம் பல்வேறு கேள்விகளை விசாரணை என்ற பெயரில் மேற்கொண்டனர். இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.

இந்த நேரத்தில் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் எந்தவிதமான தவறான எண்ணத்திலும் பேசவில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. யாரையும் தாழ்த்தி பேசவில்லை.

பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என்பது எனது மனதில் இல்லை. எனது குடும்பம், எனது பெற்றோர், என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி மனைவி உள்ளார். எனக்கொரு பெண் குழந்தை உள்ளார். எனக்கொரு சகோதரி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாய்மாரையும் எனது குடும்பமாக பார்க்கிறேன்.

எனது கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பு, பாசத்துக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்கள் எல்லோரும் கைதாகி உள்ளனர். அவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும்.

எங்கள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், முதன்மை செயலாளர், வழக்கறிஞர் அணி, கட்சியின் முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் என்னுடன் நின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கூட்டணி கட்சியின் தலைவர்களும் எனது பேச்சை புரிந்து கொண்டு, கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனக்கு என்ன வருத்தம் என்றால் சில தலைவர்கள் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல், நான் தவறாக பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது. நான் தவறான எண்ணத்தில் பேசவில்லை.

நான் விவசயிகளுக்கு ஆதரவாக பேசினேன். அதற்காக இந்த அரசு என்னை கைது செய்தது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த கைது நடவடிக்கைக்கு நான் பயப்படமாட்டேன்.

சிலர் நான் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தெரிவித்துள்ளனர். நிச்சயமாக எந்தவிதமான இரட்டை அர்த்தத்திலும் நான் பேசவில்லை. நான் ஒற்றை அர்த்தத்தில்தான் பேசினேன். காவிரிக்கு தண்ணீர் வரவில்லை என்றுதான் நான் பேசினேன். இதை நான் மீண்டும் பேசுவேன். திசை திருப்பவே இந்த நடவடிக்கை” என்று அவர் தெரிவித்தார்.

“நான் யாரையும் தவறாக பேசவில்லை; எனது பேச்சை திரித்துவிட்டனர்” - உதயநிதி
தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in