

தமிழகத்தில் வாக்குகளைப் பிரித்து வெற்றி பெறுவதற்காக பாஜக விரித்த வஞ்சக வலையில் தவெக விழுந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வேட்பு மனு உறுதிமொழி பத்திரத்தில், அப்பாவுக்கு கடன் கொடுத்தேன், அம்மாவுக்கு கடன் கொடுத்தேன், மனைவிக்கு கடன் கொடுத்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை இப்படி ஒரு விஷயத்தை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் சொன்னதாக நான் கேள்விப்பட்டது இல்லை.
நடிகர், நடிகைகளைப் பார்ப்பதற்காக கூட்டம் வரத்தான் செய்யும். பார்க்க வரும் கூட்டம் வேறு, பேச்சைக் கேட்க வரும் கூட்டம் வேறு. தமிழக முதல்வருக்கு வரும் கூட்டம் பேச்சைக் கேட்க வரும் கூட்டம். பல சித்து வேலைகள் செய்து வாக்குகளை பிரித்து திமுக கூட்டணியை தோற்கடித்து விடலாம் என்று பாஜக எண்ணுகிறது.
அந்த வஞ்சக வலையில், விஜய்யின் தவெக-வும் விழுந்துவிட்டது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியில் வராமல் இருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் சென்சார் போர்டு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதற்கு திமுக அரசை விஜய் விமர்சனம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.