“தமிழக ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்” - விஜய்க்கு நயினார் வேண்டுகோள்

“தமிழக ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்” - விஜய்க்கு நயினார் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ரயில்வே திட்டங்கள் மற்றும் தமிழக ரயில்வே துறைக்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி உள்ளிட்டவை தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு 8 மடங்கு அதிக நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறியுள்ளது.

மொத்தம் 19 புதிய ரயில்வே திட்டங்கள், கிட்டத்தட்ட 500 கிமீ வரையிலான புதிய ரயில் பாதைகள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, மத்திய அரசின் மேலும் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவீதம் அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துள்ளதையும் நமது மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, முந்தைய அரசைப் போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைபிடிக்காமல், ரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு துணை நிற்குமாறு முதல்வர் விஜய்யை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழக ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த துணை நிற்க வேண்டும்” - விஜய்க்கு நயினார் வேண்டுகோள்
“எப்சிஆர்ஏ மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும்”: மல்லிகார்ஜுன கார்கே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in