“எப்சிஆர்ஏ மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும்”: மல்லிகார்ஜுன கார்கே

“எப்சிஆர்ஏ மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும்”: மல்லிகார்ஜுன கார்கே
Updated on
1 min read

ருத்ராபூர் (உத்தராகண்ட்): வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்றும், இந்த மசோதாவை தோற்கடிப்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிதி நடைமுறையை கடுமையாக்க வெளிநாட்டு நிதி திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த மாதம் 25-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவில் உள்ள தனி நபர்கள், சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை வெளிநாடுகளிடம் இருந்து நிதி பெறுவதையும், அவற்றைப் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்தும் தற்போதைய வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் 2010-ல் சில திருத்தங்களை அரசு முன்மொழிந்துள்ளது.

இந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். உத்தராகண்ட்டின் ருத்ராபூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எப்சிஆர்ஏ தொடர்பான அரசின் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பான (நாடாளுமன்ற) வியூகத்தை திட்டமிடுவதற்காக நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்போம்.

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் முதலில் எழுப்பியது காங்கிரஸ் கட்சிதான்.

அயோத்தி ராமர் கோயில் அறங்காவலர் குழுவை நியமித்தது யார்? கோயிலை தொடங்கிவைத்தது யார்? ராமர் கோயிலில் கொடியை ஏற்றியது யார்? அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தது யார்? எல்லாவற்றையும் முன்னின்று நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. எனவே, இது குறித்து அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

“எப்சிஆர்ஏ மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும்”: மல்லிகார்ஜுன கார்கே
“சிலர் ‘ஜென் ஸி’-ஐ தவறாக வழிநடத்த முயன்றனர்” - ராஜினாமா குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in