

கரூர்: எதிர்க்கட்சி நாளிதழில் ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி அவதூறாக எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து இன்று (ஜூன் 17) ரூ.20 லட்சத்தில் சலவை இயந்திரத்தை எம்.பி. செ.ஜோதிமணி வழங்கினார். ஆட்சியர் சி.முத்துக்குமரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாரதிமோகன், மாநகராட்சி ஆணையர் பிரிதிவ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் எம்.பி ஜோதிமணி கூறியது: “தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடுவது இயல்புதான். என்னை பொறுத்தவரை இது ஒரு நல்ல விஷயம்தான். அப்போதுதான் மக்களுக்கு ஒரு தெளிவான புரிதல் இருக்கும்.
இந்த வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பது புதிய அரசுக்கு சவாலாக இருக்கும். ஏனென்றால், கடலை மிட்டாய்க்கு கூட வரி போட்டு மத்திய அரசு எடுத்து சென்று விடுகிறது. ஆனால், அந்தப் பணம் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவதில்லை.
ஒரு ரூபாய் நாம் மத்திய அரசுக்கு கொடுத்தால் திருப்பி 23 பைசாதான் கொடுக்கின்றனர். அதனால் தமிழக அரசு தெளிவாக திட்டமிட்டு இதனை முன்னெடுப்பார்கள் என நம்புகிறேன்.
எதிர்க்கட்சி நாளிதழில் தொடர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி அவதூறாக எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்கும் திருப்பி பேசத் தெரியும். ஆனால், கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கடினமான காலங்களில் திமுகவும், அதேபோல் திமுகவின் கடினமான காலங்களில் காங்கிரஸும் உறுதுணையாக இ ருந்துள்ளன.
கடந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்து வேதனையில் இருப்பார்கள் என்ற அந்த காரணத்தில் நாங்கள் திமுகவை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறோம். திமுக தலைவரே தோல்வியடைந்ததால் விரக்தியில் பேசி வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் திமுகவை விட்டு வெளியேறியது காலத்தின் கட்டாயம்.
ஆனால், தொடர்ந்து ராகுல் காந்தியை தாக்கிப் பேசுவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தியா என்ற ஒரு நாட்டை காப்பாற்றக் கூடிய பொறுப்பு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பையும் கடமையையும் இணைந்து செய்யலாம் வாருங்கள் என்றுதான் இண்டியா கூட்டணி சொல்கிறது.
அதனால் தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்து எழுதுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். நாங்கள் எப்படி கண்ணியத்தை கடைப்பிடிக்கிறோமோ, அதேபோல திமுகவும் கடைபிடிப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசுபவர்களை கட்டுப்படுத்துவார் என நம்புகிறேன். நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பதை பலவீனமாக நினைத்து விடக்கூடாது. வரும் காலங்களில் இண்டியா கூட்டணியில் தவெக இணையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் ஜோதிமணி.