நீட் மறுதேர்வு அச்சத்தால் கோவையில் மாணவி தற்கொலை

அனுகீர்த்தனா

அனுகீர்த்தனா

Updated on
1 min read

கோவை: நீட் மறுதேர்வு அச்சத்தால் கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கோவைப்புதூரில் உள்ள பாரூக் நகரைச் சேர்ந்தவர் செந்தில்பிரபு. இவர், டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். கோவை சி.ஐ.டி.யு. டாஸ்மாக் தொழிற்சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அனுகீர்த்தனா (19). இவர், பிளஸ் 2 வகுப்பு முடித்துவிட்டு மருத்துவப் படிப்புக்குச் செல்ல, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்கு முன்பு இரு முறை நீட் தேர்வு எழுதிய மாணவி அனுகீர்த்தனா அதில் தோல்வியடைந்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பாண்டும் மாணவி அனுகீர்த்தனா நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், வினாத்தாள் முன்னரே வெளியான விவகாரத்தால், சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அடுத்த சில நாட்களில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவி சோகமடைந்தார். நீட் மறுதேர்வு எழுத வேண்டும் என அச்சமடைந்து மனக் குழப்பத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று (ஜூன் 16) நள்ளிரவு வரை மாணவி அனுகீர்த்தனா நீட் தேர்வுக்காக படித்தார். நள்ளிரவுக்கு பின்னர் உறங்கச் சென்றார்.

இதற்கிடையே, நீட் மறுதேர்வு அச்சத்தால் மன உளைச்சல் அடைந்த மாணவி அனுகீர்த்தனா நேற்று நள்ளிரவு தூங்க செல்லும் முன்னர் தலைவலிக்கு தேய்க்க பயன்படுத்தப்படும் திரவ வடிவிலான தைலத்தை குடித்துள்ளார். பின்னர், அவரது உடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அதில், தைலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குடும்பத்தினர் மாணவி அனுகீர்த்தனாவை மீட்டு ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாணவி மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

<div class="paragraphs"><p>அனுகீர்த்தனா</p></div>
4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in