

ஜெயந்தி குமரேஷ், சுகந்தா காளமேகம், நரேந்திரன், சுப்பிரமணியம், பி.பாலசுப்பிரமணியன், ஜி.நரேந்திரா, ஏ.ஜனார்த்தனன், ராஜேஸ்வரி
சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 2026-ம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’, ‘நிருத்ய கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளைப் பெறும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் விருதுகளுக்கு இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சங்கீத கலாநிதி: இசைப் பாரம்பரியமிக்க லால்குடி குடும்பத்தில் இருந்து வந்த வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷ், ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தாய் ராஜலட்சுமி, பத்மாவதி அனந்தகோபாலன், எஸ்.பாலச்சந்தர், லால்குடி ஜெயராமன், டி.பிருந்தா, தஞ்சாவூர் சங்கரய்யர், டி.ஆர்.சுப்பிரமணியத்திடம் பயின்றவர். இசைத் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.
சங்கீத கலா ஆச்சார்யா (2 பேர்): கர்னாடக இசைப் பாடகி சுகந்தா காளமேகம். இவர் கடையம் கிருஷ்ணமூர்த்தி, கோபாலய்யர், சந்தியாவந்தனம் சீனிவாசராவ், டி.கே.கோவிந்தராவ் ஆகியோரிடம் கர்னாடக இசையும், டெல்லி காந்தர்வ மகா வித்யாலயாவில் இந்துஸ்தானியும், திருவனந்தபுரம் ஆர்.வெங்கடராமனிடம் வீணையும் பயின்றவர்.
மிருதங்க வித்வான் திருச்சூர் சி.நரேந்திரன் 7 வயதில் இசைப்பயிற்சி தொடங்கியவர். கே.பரமேஸ்வரன் நம்பூதிரி, குன்னங்குளம் டேவிட் பாகவதர், இ.பி.நாராயண பிசரோடி, கொடுவாயூர் ராதாகிருஷ்ணன், பாலக்காடு ஆர்.ரகுவிடம் மிருதங்கம் பயின்றவர்.
டிடிகே விருது (2 பேர்): நாகஸ்வரக் கலைஞர் இஞ்சிக்குடி சுப்பிரமணியம். இவர் தனது தந்தை முத்துக்குமாரசாமி பிள்ளையிடமும், அய்யாசாமிப் பிள்ளை, திருமாகாளம் வி.சோமாஸ்கந்தம் பிள்ளையிடமும் பயின்றவர். வயலின் கலைஞர் டிகேவி.ராமானுஜாச்சார்யுலு. இவர் தனது தந்தையிடம் பயிற்சியைத் தொடங்கி, கிருஷ்ணமாச்சார்யுலுவிடம் பயிற்சி பெற்றார்.
டிகேவி.ராமானுஜாச்சார்யுலு, டி.கே.பத்மநாபன்
இசை அறிஞர் விருது: அமெரிக்காவின் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் குளோபல் சவுத் ஏசியன் ஸ்டடீஸ் பிரிவின் இணை தலைவரும், இசைத் துறை இணை பேராசிரியருமான டாக்டர் பி.பாலசுப்பிரமணியன், இசை அறிஞர் விருது பெறுகிறார்.
நடன விருதுகள் நிருத்ய கலாநிதி: பரதநாட்டியக் கலைஞர் ஜி.நரேந்திரா, விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இவர் கலாஷேத்ராவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ‘அவிக்னா டான்ஸ் என்செம்பிள்’ நிறுவனத்தை தொடங்கி அதன் இயக்குநராக உள்ளார்.
நிருத்ய கலா ஆச்சார்யா: நடனக் கலைஞர் ஏ.ஜனார்த்தனன், இந்த விருதைப் பெறுகிறார். இவர் கலாஷேத்ராவில் ருக்மிணி தேவி அருண்டேலிடம் பரதநாட்டியமும், தனது தந்தை டி.கே.சந்து பணிக்கரிடம் கதகளியும் பயின்றவர்.
நடன இசைக் கலைஞர் (பாட்டு): பாடகியும், பாட்டு ஆசிரியையுமான எஸ்.ராஜேஸ்வரி இந்த விருதைப் பெறுகிறார். இவர் தஞ்சை பாலசுப்பிரமணியம், ராமநாதபுரம் கிருஷ்ணன், டி.முக்தாவிடம் இசை பயின்றவர்.
நடன இசைக் கலைஞர் (வாத்தியம்): வயலின் கலைஞர் டி.கே.பத்மநாபன் இந்த விருதைப்பெறுகிறார். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர் பக்கவாத்தியம் மட்டுமின்றி தனி கச்சேரிகளும் வழங்கியுள்ளார்.
மியூசிக் அகாடமியின் 100-வது ஆண்டு கருத்தரங்குகள் 2026 டிச.15 தொடங்கி, 2027 ஜன.1-ம் தேதி வரை நடைபெறும். ‘சங்கீத கலாநிதி’ விருதாளர் ஜெயந்தி குமரேஷ் தலைமை தாங்குவார். ஜன.1-ல் நடைபெறும் சதஸ் நிகழ்வில் இசைத் துறை விருதுகளும், ஜன.3-ல் நடைபெறும் 20-வது ஆண்டு நாட்டிய விழாவில் நடனத் துறை விருதுகளும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.