

ராமநாதபுரம்: “மீனவர் பிரச்சினைகளில் தீர்வு காண மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது” என மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர் நலச் சங்க கட்டிடத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஶ்ரீநாத் இன்று திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் கேக் வெட்டி மீனவர்களுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியில் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் நல்லதம்பி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் நிர்வாகி ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் பூர்வீக ஊரான முத்துப்பேட்டையில் தேவாலயக் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ள முதல்வர் விஜய்யின் தாத்தாவும், அவரது தந்தை சந்திரசேகரின் தந்தையுமான சேனாதிபதி பிள்ளையின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “மீனவர் தின நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டைக்கு வந்திருந்ததால், மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யின் தாத்தா கல்லறையில் மரியாதை செலுத்தினேன்.
தமிழகம் முழுவதும் மீனவர் சந்திப்புகளின்போது மீனவர்கள் தங்களுக்கான காப்பீடு, அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
இவை அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீனவர்கள் எதிர்பார்க்கும் உதவிகளை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். விரைவில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றப்படும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கான நிதியுதவி, பறிமுதல் செய்யப்படும் விசைப் படகுகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பதைத் தவிர்க்க உரிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறார். மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, பல்வேறு மீனவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது” என்றார்.